இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா...தோல்விக்கு காரணம் இது தானா?
டி20 கிரிக்கெட் உலகின் வல்லரசாக கோலோச்சி வரும் இந்திய அணிக்கு நேற்றைய ஆட்டம் , மிகப்பெரிய அடியாக இருந்தது. "யானைக்கு அடி சறுக்கும்" என்பதைப் போல இந்திய அணியின் விக்கெட்டுகள் போல போல வென்று சரிந்தது மட்டுமின்றி , தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் பெற்ற 12 வெற்றிக்கும் முற்றுப்புள்ளியை பெற்றுக் கொண்டது. நேற்றைய தோல்விக்கு காரணம் என்னவாக இருக்கும்? என்பதை இந்திய அணி ஆராய்ந்தால் தான் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.
முக்கியத்துவம் வாய்ந்த டி20 உலக கோப்பை தொடர் லீக் சுற்று முடிந்து, அடுத்த கட்டமாக சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது. லீக் சுற்றில் இந்திய அணி , பாகிஸ்தான் உள்பட எந்த அணியிடமும் தோற்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. அங்கு தென்னாப்பிரிக்க அணியிடம் சிக்கி , 12 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக தோற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளையும் இழந்து தத்தளித்து வந்தது.
அடுத்து வந்த பிரேவியஸ் , டேவிட் மில்லர் , ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 188 என்ற இலக்கு இந்திய அணிக்கு ஒரு சாதாரணமான ஒன்று தான். ஆனால் , இந்த ஸ்கோரை விரட்ட முடியாமல் இந்திய அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது , இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 76 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வி பல சீனியர் விளையாட்டு வீரர்களின் கோபத்தையும் தூண்டி உள்ளது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம், இந்திய அணி விளையாட்டு வீரர்களின் அலட்சியமான போக்குதான். இந்த தோல்வியை தற்காலிகமாக நினைத்து கடந்து விட்டால் , அது அடுத்து வரும் போட்டிகளில் பிரதிபலிக்கும். தோல்விக்கான சில காரணங்கள் ,
1. பவுலிங்கில் சொதப்பியது:
அனுபவ வீரர் பும்ரா 3 விக்கெட்டுகளையும் , அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் எந்த விக்கெட்களையும் எடுக்காதது பெரும் சோதனையாக அமைந்தது. மேலும் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தியின் பந்துகளை, தென் ஆப்பிரிக்கா அணியினர் துவைத்து எடுத்தனர்.
2. பேட்டிங் மகா சொதப்பல்:
இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராக இருந்தாலும் , அவர்கள் 187 ரன்களை தாண்டி வாரி வழங்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் டக் அவுட்டாகி ஆகி கலங்க வைத்தார். அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெறத் தவறியது. அடுத்தடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க மொத்தமாக மறந்தது தான், தோல்விக்கு முக்கிய காரணம். 3 டக் அவுட்கள் இந்திய அணியின் பெருமையை தகர்த்து விட்டது. இந்த தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை 4 இன்னிங்ஸ்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
கவாஸ்கர் மற்றும் ஷான் பொல்லாக் கருத்துகள்:
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் "ஆடுகளத்தை பற்றி பந்துவீச்சாளர்கள் உணர்ந்து கொள்வது அவசியம், ஆடுகளம் பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தபோது, இந்திய வீரர்கள் விவேகம் இன்றி செயல்பட்டது தவறு. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மைதானத்தின் சூழலை புரிந்து கொண்டு பொறுமையாக விளையாடிய போது, இந்திய அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே தூக்கி அடிக்க முயன்று விக்கெட்டுகளை இழந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் " இந்திய அணியின் தோல்விக்கு பிளான் பி இல்லாதது தான் காரணமாக அமைந்தது. இந்தியா தனது அனுபவ அறிவை பயன்படுத்தாமல், ஆரம்பத்திலேயே சிங்கிள் எடுக்க நினைக்காமல் , அதிரடியாக விளையாட முயன்றது தான் தோல்விக்கு காரணம்" என்றுள்ளார்.
இனி அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி கட்டாய வெற்றி பெற்றால் தான், அரை இறுதிக்கு செல்ல முடியும். அடுத்ததாக ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடுவது மட்டுமல்லாமல், சில நேரங்களில் நிதானமாகவும் விளையாட வேண்டும், என்பதையே இந்த தோல்வி இந்திய அணிக்கு உணர்த்துகிறது.

