

2025-ம் ஆண்டில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆண்டு என்றும் சொல்ல முடியாது, சுமாரான ஆண்டு என்றும் சொல்ல முடியாத வகையில் தான் அமைந்தது. இந்நிலையில், இந்திய அணி தற்போது 2026ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. ஆண்டின் தொடக்கமாக ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.
அந்த வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.
இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11ம் தேதி குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில்(baroda cricket association stadium) நடைபெறும், இது கோடாம்பி ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து வரும் ஜனவரி 14-ம்தேதி, ராஜ்கோட்டில் 2-வது போட்டியும் மற்றும் 18-ம்தேதி இந்தூரில் 3-வது பேட்டியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஜனவரி 21, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் முறையே நாக்பூர், ராய்ப்பூர், கௌகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் ஐந்து டி20ஐ போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த 3 ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நேற்று(ஜனவரி 1-ம்தேதி), தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 8 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி இந்த போட்டிகளில் விளையாடுவதே டிக்கெட்டுகள் இந்த வேகத்தில் விற்பனையானதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ரசிகர்கள் பார்க்க முடியும் என்பதால் இரு வீரர்களின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் முதல் சர்வதேச போட்டியாக இருக்கும், அதே நேரத்தில் இந்திய நட்சத்திரங்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள்.
தற்போது, இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஆஃப்லைன் டிக்கெட் விற்பனை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.