

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் (10) மற்றும் இஷான் கிஷன் (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும், இளம் வீரர் அபிஷேக் சர்மா அதிரடியில் மிரட்டினார். வெறும் 22 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், மொத்தம் 35 பந்துகளில் 84 ரன்கள் (5 பவுண்டரி, 8 சிக்ஸர்) விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
நடுவரிசையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களும் சேர்த்தனர். கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் தனது பாணியில் அதிரடி காட்டி 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது.
239 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டெவன் கான்வே ரன் ஏதுமின்றியும், ராபின்சன் 21 ரன்களிலும் வெளியேறினர். பிலிப்ஸ் மட்டும் தனி ஆளாகப் போராடி 40 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுதினம் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது.