சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போது நவம்பர் 18 ஆம் தேதி நியூசிலாந்து நாட்டில் வெலிங்டனில் தொடங்கும் அடுத்த போட்டிக்கு தயாராகி வருகின்றன. இந்தத் தொடர் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டதாக இருக்கும். ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் மற்றும் ஷிகர் தவான் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார்.
இந்தியாவின புதிய மித வேகப் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கின் சர்வதேச ஒருநாள் போட்டியின் வருகையை இந்தத் தொடர் குறிக்கும். மேலும் ரவிசந்திரன் அஸ்வின் இந்தத் தொடரில் இல்லாததால், தமிழ் நாட்டின் இளம் சுழல் பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்தத் தொடரில் சுழல் பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலும் இடம்பெற்றுள்ளனர்.
இம்முறை அமேசான் பிரைம் நிறுவனம் இத்தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது. அதனால் இந்தத் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியாது.
டி20 தொடர் அட்டவணை
முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை, நவம்பர் 18 அன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் நடைபெறும்.
இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 20ஆம் தேதி, ஞாயிறு அன்று மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
மூன்றாவது டி20 நவம்பர் 22, செவ்வாய்கிழமை நேப்பியரில் உள்ள மெக்லீன் பூங்காவில் நடைபெறுகிறது.
(அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி மதியம் 12:00 மணிக்கு தொடங்கும் மற்றும் டாஸ் காலை 11:30 மணிக்கு இருக்கும்)
ஒரு நாள் போட்டிக்கான தொடர் அட்டவணை
முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் வெள்ளிக்கிழமை, நவம்பர் 25 அன்று நடைபெறும்.
இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டனில் உள்ள செடான் பூங்காவில் நடைபெறும்.
மூன்றாவது ஒருநாள் போட்டி நவம்பர் 30 புதன்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
(அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு தொடங்கும் மற்றும் டாஸ் காலை 6:30 மணிக்கு இருக்கும்)
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
இந்திய டி 20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சுப்மன் கில், ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், .தீபக் குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
இம்முறை நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி மிகவும் துடிப்பான இளம் வீரர்களைக் கொண்ட அணி. தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் இதில் இடம் பெறவில்லை. 2023 இல் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தேர்வில், இதுபோன்ற சர்வதேச தொடர்களில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.