

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதிய போது மைதானத்தில் சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் நடைபெற்றது. ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணிக்கு 10 ரன்கள் இலங்கை நடுவர்கள் அபராதம் விதித்திருந்தனர். போட்டியின் முடிவில் இரு அணிகளும் ஒரே ஸ்கோரை பெற்றிருந்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த ஓவரில் இலங்கை வெற்றி பெற்றதும் , இந்திய அணி வீரர்களின் நோக்கி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே, இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷியை நோக்கி, "போட்டி முடிந்தது வீட்டுக்குப் போ, இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது" என்று கேலி செய்து வம்பு இழுத்துள்ளார். இதனால், கோபமடைந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஹாலம்பகேவின் நெஞ்சில் கையை வைத்து பலமாகத் தள்ளினார் , பதிலுக்கு அவரும் வைவபவ் மற்றும் திலக் வர்மாவிடம் சண்டைக்கு வந்தார். இந்த நிகழ்ச்சியினால் மைதானத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த பிரச்சனை பிசிசிஐயின் கவனத்திற்கு சென்றது. இலங்கை மைதானத்தில் நடைபெற்ற இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து , நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் தீவிர விசாரணை நடத்தினார். அவரது விசாரணையின் அடிப்படையில் விதிகளை மீறி இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி செயல்பட்டதாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளது. இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது சர்வதேச முதல் தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷி தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்திய ஏ அணியின் கேப்டன் திலக் வர்மாவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். போட்டியின் போது சூப்பர் ஓவர் நடத்தியது குறித்தும் , நோ பால் மற்றும் வெளிச்சமின்மை புகார்கள் ஆகிய விஷயங்களுக்கு நடுவர்களிடம் திலக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகளுக்காக அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 30% தொகையை பிசிசிஐ அபராதமாக விதித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியமும் அந்த அணி வீரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய வீரரை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு காரணமான இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகேவுக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த மோதலின் போது ஹாலம்பகே உடன் இருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவுக்கும் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சர்வதேச 'ஏ' அணிகள் விளையாடும் போட்டிகளில் தலையிட்டு ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பது இல்லை. இது போன்ற சூழல்களில் சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களே ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும். அதன்படி இந்திய கிரிக்கெட் வாரியமும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்கள் அணி வீரர்களும் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
பிசிசிஐ இது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்க வேண்டும். மைதானத்தில் தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் மோதல்களில் ஈடுபடாமல், விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.