

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அதன் அரையிறுதியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிக்கொண்டன. டாசை வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் , மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா அதிரடியான துவக்கத்தை இந்திய அணிக்கு அளித்தார்.
ஷாபாலியின் அதிரடியில் இந்திய அணியின் ஸ்கோர் சராசரியாக உயர்ந்து கொண்டிருந்தது. ஷாபாலி 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார் , இதில் 3 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். ஷஃபாலிக்கு ஆதரவாக பிரதிகா ராவல் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 28 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பாக ரிச்சா கோஷ் 2 சிக்ஸர்கள் அடித்து 21 ரன்கள் எடுத்தார் .
20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிரணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை குவித்திருந்தது. வங்கதேச அணியின் சுல்தானா கவுன் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். 150 என்ற எளிதான இலக்கை துரத்திய வங்க தேச அணிக்கு சுமாரான துவக்கத்தினை திலாரா அக்தர் மற்றும் ஜுவாரியா பெர்டோஸ் கொடுத்தனர். 5 ஓவர்கள் வரை எந்த ஒரு விக்கெட் இழப்பின்றி வங்கதேச அணி கடந்தாலும், ரன் எடுக்க கடுமையாக தடுமாறியது.
திலாரா அக்தர் 21 ரன்களும், கேப்டன் நிகர் சுல்தானா 19 ரன்களும் எடுத்தனர். மற்ற வங்கதேச அணி வீராங்கனைகள் சராசரியாக ரன்களை எடுக்க இறுதி ஓவர்களில் வெற்றி இலக்கை நெருங்கவே முடியாத சூழலுக்கு சென்றனர். 20 வது ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டை இழந்து 109 ரன்களை மட்டுமே குவித்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணி இலங்கையா? பாகிஸ்தானா? என்பது அவர்கள் மோதவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முடிவில் தெரிந்து விடும். நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இந்திய அணி , நீண்ட காலமாகவே இந்த தொடரில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது.
இந்த போட்டியில் தீப்தி ஷர்மா சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவி உள்ளார். அதே நேரம் ஶ்ரீ சாரணி 4 ஓவர்கள் பந்து வீசி 14 ரன்களை மட்டுமே கொடுத்ததால் , வங்க தேச அணியின் ரன்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது, மேலும் அவர் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
இதுவரை நடைபெற்ற 9 ஆசிய கோப்பை இறுதி போட்டிகளிலும் பங்கு பெற்ற ஒரே அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் 7 முறை ஆசிய கோப்பை சாம்பியனாக வரலாறு படைத்துள்ளது. ஒருமுறை வங்கதேச அணியும் ஒரு முறை இலங்கை அணியும் ஆசியக் கோப்பையை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.