ஆசிய கோப்பையை வென்றது இந்தியா! சிராஜ் பந்துவீச்சில் சுருண்டது இலங்கை!

India won the Asia Cup 2023
India won the Asia Cup 2023

இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி விக்கெட் நஷ்டமின்றி 51 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆசிய கோப்பையை இந்தியா பெறுவது 8-வது முறையாகும்.

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 7 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது போட்டியின் சிறப்பு அம்சமாகும்.

இலங்கை அணியில் ஐந்து பேட்ஸ்மென்கள் ரன்கள் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டாயினர்.

இந்திய அணியினர் விக்கெட் நஷ்டமின்றி 6.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டினர். 10 விக்கெட்டுகள் மற்றும் 263 பந்துகள் வீச வேண்டிய நிலையில் இந்தியா அதிக இடைவெளியில் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2001 இல் கென்யாவுக்கு எதிரான போட்டியில் 231 பந்துகள் வீசப்பட வேண்டிய நிலையில் 91 ரன் இலக்கை எட்டி இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன் சுப்மன் கில்லுடன் ஆட்டத்தை தொடங்கினார். மழை பெய்வதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையிலும் சிறு தூறல்கள் காரணமாக ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

முதலில் இலங்கை அணி விளையாடத் தொடங்கியது. ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் ஓவரிலேயே குசால் பெரைரா விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். 6 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கைக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார். தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓவர்களில் சிராஜ், பதும் நிஸ்ஸாங்கா, சதீர சமரவிக்ரம, சரித் அஸலங்கா மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய நான்கு விக்கெட்டுகளையும் சாய்த்தார். மேலும் கேப்டன் தாஸன் சங்கராவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். 2.4 ஓவர்களில் அவர் இந்த விக்கெட்டுகளை சாய்த்தார்.

இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் முகமது சிராஜ் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓருநாள் சர்வதேச போட்டியில் சாதனை நிகழ்த்தினார். இதற்கு முன் ஸ்டூவர்ட் பின்னி (6-க்கு 4), அனில் கும்ப்ளே (6-க்கு 12) மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா (6-க்கு 19) ஆகியோர் சாதனை படைத்திருந்தனர்.

இலங்கை அணி 50 ரன்களில் வீழ்ந்தது. ஒருநாள் சர்வதேச போட்டியில் குறைந்த ரன்களில் அவர்கள் ஆட்டத்தை இழந்துள்ளது இது இரண்டாவது முறையாகும்.

ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி சிறப்பாகவே விளையாடியது. ஜிம்பாப்வேயை வென்று உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த போதிலும், பாகிஸ்தானை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இலங்கையின் முன்னிலை ஆட்டக்காரர்களை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் ஹர்திக் பாண்டியா, தன் பங்குக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com