இந்திய டென்னிஸ் நாயகன் ரோகன் போபண்ணா!

Rohan Bopanna
Rohan Bopanna
Published on

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோகன் போபண்ணா பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வரும் போபண்ணாவின் ஓய்வு, இந்திய டென்னிஸில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. லெஜன்ட் போபண்ணாவின் டென்னிஸ் வாழ்வைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த ரோகன் போபண்ணா 2002 ஆம் ஆண்டில் டென்னிஸ் உலகில் நுழைந்தார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் இந்தியாவுக்காக பல போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளார். தற்போது 44 வயதாகும் போபண்ணா ஏற்கனவே டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். நடப்பாண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் 2018 ஆம் ஆண்டு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 2022 ஆம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன் இணைந்து விளையாடிய போபண்ணா, 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் ரோகன் போபண்ணா - ஸ்ரீராம் பாலாஜி இணை தோல்வியுற்றதால், டென்னிஸில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது. இதன்பிறகு, சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அதிக வயதுடையவர் போபண்ணா தான்.

இதையும் படியுங்கள்:
ஆதரவற்ற சிறுவர்களை முன்னேற்றும் முயற்சி! ரோகன் போபண்ணாவின் உயரிய நோக்கம்!
Rohan Bopanna

ஓய்வு குறித்து போபண்ணா கூறுகையில், “பாரிஸ் ஒலிம்பிக் தான் என்னுடைய கடைசி சர்வதேச போட்டியாகும். கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவிற்காக விளையாடியதை நினைத்துப் பெருமை கொள்கிறேன். டேவிஸ் கோப்பையை வென்றதும், உலக டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததும் எனது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள். இனி பயிற்சியாளராக பங்கேற்று பல டென்னிஸ் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் நான் களம் காணப் போகிறேன். இருப்பினும் எனது உடல் நிலையைப் பொறுத்து தொழில்முறை போட்டிகளில் மட்டும் விளையாடுவேன். என்னுடைய டென்னிஸ் பயணம் சிறக்க பல தியாகங்களைச் செய்த என் மனைவி சுப்ரியாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் டென்னிஸ் அகாடமி ஒன்றைத் தொடங்கினார் போபண்ணா. மேலும், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து பழங்குடியின சிறுவர்களுக்கு டென்னிஸ் பயற்சி அளித்து வருகிறார்.

டென்னிஸில் இந்தியாவுக்காக விளையாடி பெருமை சேர்த்த போபண்ணாவை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு அர்ஜூனா விருதையும், 2024 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதையும் வழங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com