
டிச 22 , ஞாயிற்றுக் கிழமை அன்று வதோதராவில் உள்ள கொட்டாம்பி மைதானத்தில் இந்திய மற்றும் மே.இந்திய தீவுகள் மகளிர் அணியினர் மோதும் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிய டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணி உற்சாகமாக உள்ளது. இதுவரை இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் இந்திய அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது; மே. இ.தீவுகள் அணியோ 5 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காயம் காரணமாக 2வது டி20 போட்டியில் வெளியேறிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
வழக்கம் போல மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் ஸ்மிருதியும் அறிமுக வீராங்கனை பிரத்திகா ராவலும் களமிறங்கினர். 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் என்று மிகவும் பொறுமையாக விளையாடினார். பிரித்திகா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி நன்றாக விளையாடி 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த 20 ஓவர்களில் இந்திய அணி, மே.இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை வெளுக்க ஆரம்பித்தது. இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர ஆரம்பித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக உயர்த்தினர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 314/9 என்ற பெரிய ஸ்கோரை எட்டினர். மே. இந்திய தீவுகள் அணி சார்பில் சைதா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மே.இந்திய தீவுகள் அணி விரட்டலை தொடங்கும் போதே பலத்த அடி வாங்கியது . முதலில் கியனா ஜோசப் டக் அவுட்டானார். அடுத்து ஹெய்லியும் டக் அவுட் ஆக, துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன்கள் இன்றி வெளியேறினர். அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ் உமன்கள் ஒவ்வொருவரும் ரன்கள் எடுக்காமல் தவிக்க ஆரம்பித்தனர். சில ஓவர்களில் ரன்களே இல்லை. ரேணுகா சிங்கின் துல்லிய பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை காலி செய்தார். பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை வெளியேறினார். மே.இந்திய தீவுகள் அணி சார்பில் பிளட்சர் மட்டுமே 24 ரன்களை எட்டினார். 26.2 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 103 ரன்களுக்கு மே.இந்திய தீவுகள் அணி ஆட்டமிழந்தது.
இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது இந்திய அணியின் இரண்டாவது பெரிய ரன் வித்தியாசம் ஆகும். இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் அயர்லாந்து அணியை 249 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுது முதன்மையாக உள்ளது. தொடர்ச்சியாக ஸ்மிருதி 4 வது சர்வதேச போட்டியில் அரை சதம் அடித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற லாரா வால்வெர்ட்டின் (1593) சாதனையை முறியடித்து ஸ்மிருதி 1600 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டியின் ஆட்ட நாயகியாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு அதே மைதானத்தில் தொடங்கும்.