உலகக் கோப்பைக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி!

உலகக் கோப்பைக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி!

ஹாக்கி ஃபைவ்ஸ் ஆசிய தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா, மலேசியாவை 9-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியா, அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்குபெற தகுதிபெற்றுள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய மகளிர் அணியினர் சற்று தடுமாறினர். மலேசியாவின் ஸாத்தி முகமது 4-வது மற்றும் 5-வது நிமிடங்களில் கோல் அடித்து தனது அணிக்கு அபாரமான தொடக்கத்தை கொடுத்தார். பின்னர் இந்திய அணியினர் சுறுசுறுப்பு காட்டி மீண்டு எழுந்தனர். கேப்டன் நவ்ஜோத் கெளர் 7-வது நிமிடத்திலும், மரியானா குஜுர் 9-வது நிமிடத்திலும் கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தனர்.

இந்த நிலையில், நவ்ஜோத் கெளர் 10-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் போட்டதை அடுத்து இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து மலேசியாவின் டியான் நஸேரி தமது அணி சார்பாக ஒரு கோல் அடிக்க மீண்டும் ஆட்டம் சமன் ஆனது. 12-வது நிமிடத்தில் இந்திய அணியின் மரியானா குஜுர் ஒரு கோல் போட்டார்.  அடுத்து 14-வது நிமிடத்தில் மஹிமா செளதுரி கோல் போட இந்திய 5-3 என மீண்டும் முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் மலேசியாவின் அஸிஸ் ஜாஃபிரா கோல் போட்டார். அதே நேரத்தில் கேப்டன் நவ்ஜோத் கெளர் ஒரு கோல் போட்டார். இதையடுத்து இந்திய 6-4 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் மலேசியாவின் டியான் நஸேரி ஒரு கோல்போட்டதால் 6-5 என்ற நிலை இருந்தது.

எனினும் இந்தியாவின் ஜோதி 21-வது நிமிடத்திலும்  மோனிகா தீபி 22-வது நிமிடத்திலும் மீண்டும் ஜோதி 26-வது நிமிடத்திலும் அடித்த கோல்களால் இந்தியா 9-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது.

பின்னர் இறுதிப் போட்டியில் தாய்லாந்தை 7-2 என்ற கோல்கணக்கில் வென்ற இந்தியா, தகுதிச்சுற்றை தோல்வியே காணாமல் தொடர்வெற்றியால் நிறைவு செய்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com