
ஐசிசி சாம்பியன்ஷிப் ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி ஜன 15, நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரை முன்பே இந்திய அணி கைப்பற்றி விட்டதால் நடக்கும் போட்டி இந்திய அணிக்கு முக்கியத்துவம் இல்லாததாக இருந்தது. மறுபுறம் அயர்லாந்து அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியை இந்தியாவில் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. டாஸ் சுழற்றப்பட்டது, டாசை வென்ற ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஸ்மிருதியின் தேர்வு மிகச் சரியாக இருந்தது. துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதியுடன் பிரத்திகா ராவல் களமிறங்கினார்.கடந்த மேட்சில் இந்த ஜோடி பெரிய ரன்களை குவித்தது. இந்த முறையும் இந்த ஜோடி சிறிதும் கருணை காட்ட வில்லை. ஸ்மிருதியின் ஆட்டம் அசுரத்தனமாக இருந்தது.அயர்லாந்து அணியின் ஒவ்வொரு பந்தும் பவுண்டரிக்கு ஓடிக் கொண்டே இருந்தது. ஸ்மிருதியின் அடி ஒவ்வொன்றும் புயலை கிளப்பியது 10 ஓவர்களில் 90 ரன்களை கடந்து அயர்லாந்து அணிக்கு வேப்பிலை அடித்தனர்.
பிரத்திகா புது வீராங்கனையாக இருந்தாலும் இந்த தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார் .பயமறியாத இளம் கன்றைப் போல அவரது ஆட்டம் இருந்தது.இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அயர்லாந்து அணி அயர்ச்சியடைந்தது.ஸ்மிருதி அதிரடியாக விளையாடி 70 பந்துகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை செய்தார்.இதற்கு முன் இந்திய அணியின் ஹர்மன் பிரித்கவுர் 87 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.இது ஸ்மிருதியின் 10 வது சதமாகும்.
மறுபுறம் பிரத்திகா நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்.இந்த ஜோடி சிறப்பாக 233 ரன்களை குவித்தது.ஸ்மிருதி 12 பவுண்டரிகளையும் 7 சிக்சர்களையும் விளாசி 135 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.அடுத்து பிரத்திகாவுடன் ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தார் , இந்த கூட்டணி 100 ரன்களுக்கு மேல் குவித்தது. பிரத்திகா தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.ரிச்சா 59 ரன்களும் பிரத்திகா 154 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 435/5 என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. கடந்த மேட்சில் அடித்த 370 ரன்கள் தான் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது ,அந்த சாதனையை அடுத்த மேட்சில் இந்திய அணி தகர்க்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் இந்திய அணியின் உச்சபட்ச ஸ்கோர் உயர்ந்துள்ளது.400 ரன்களை கடக்கும் 4 வது அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
கடின இலக்குடன் விரட்டலை தொடங்கிய அயர்லாந்து அணி பனிகாலத்தில் சிக்கிய வாகனம் போல ஸ்டார்ட் ஆக மிகவும் தடுமாறியது.சாரா ஃபோர்ப்ஸ் மட்டும் சிறிது நேரம் நிற்க,மற்ற ஆட்டக்காரர்கள் இரட்டை இலக்கத்தை கூட எட்டாமல் வெளியேறினர். ஒர்லா சிறிது நேரம் தாக்கு பிடித்து ஆடினார். மற்றவர்களின் விக்கெட்டுகள் காற்றில் பறந்தது.31.4 ஓவரில் மொத்த விக்கட்டுக்களையும் அயர்லாந்து அணி இழந்து 131 ரன்களை மட்டும் எடுத்து பெரிய தோல்வியை அடைந்தது. இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்திய அணி 304 ரன்கள் என்ற வித்தியாசத்தில் மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்த பிரத்திகா ஆட்ட நாயகியாகவும், இந்த தொடரில் 310 ரன்கள் குவித்ததால் தொடர் நாயகியாகவும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை வெள்ளை சலவை செய்து கைப்பற்றியுள்ளது.