
ஐபிஎல் தொடரில், நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, ஹர்பஜன் சிங், தல தோனி குறித்து போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
நேற்றைய போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றதையடுத்து, கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் டாஸை வென்ற லக்னோ அணி பவுலிங்கைத் தேர்வு செய்த நிலையில், சென்னை அணி சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதற்கு முந்தைய போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருத்துராஜ் கெய்க்வாட் வழக்கம்போல் அதிரடியை வெளிப்படுத்தினார். இதையடுத்து சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை எடுத்தது.
அடுத்து களமிறங்கிய லக்னோ அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாகவே சென்றாலும், லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இந்த போட்டியில், கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி, 3 பந்துகளை மட்டுமே சந்தித்து அவுட் ஆனாலும், அதில் 2 சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினார். இதனால் மைதானம் முழுவதும் தோனி அதிர்வலையைக் காண முடிந்தது.
இந்நிலையில், முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணிக்கு வாழ்த்துக்களை கூறியபடி, தோனி குறித்தும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'சார் ரிலீஸ் ஆகியிருக்குற #பத்துதல பாயும், #விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல #MSDhoni இந்த முறை @IPL கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. #CSK கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு.' என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.