
ஒருவழியாக ஐபிஎல் 2023 16வது சீசன் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. நாளை முதல் பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெறும்.
பிளே ஆஃப் சுற்றைப் பொறுத்தவரை முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் முதல் போட்டியிலும், 3, 4ம் இடத்தைப் பிடித்த அணிகள் அடுத்த போட்டியிலும் மோதும். பின்னர் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். முதல் போட்டியில் தோல்வியுற்ற அணி, இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோதி, அதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அப்படிப் பார்க்கும்போது, இந்த ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் நடந்துவரும் போட்டிகளில் சதங்களும் மளமளவென குவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த ஐபிஎல்-லில் இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்த ஐபிஎல் சீசனில் அடிக்கப்பட்ட 11 சதங்களே, இதுவரை நடந்த ஐபிஎல் சீசனில் அடிக்கப்பட்ட அதிக சதங்களாக முன்னிலை வகிக்கிறது.
அதேபோல், நேற்று குஜராத்-பெங்களூரு அணி போட்டியில் சுப்மன் கில் (104) மற்றும் விராட் கோலி (101) ரன்களும், இன்னொரு போட்டியான ஹைதராபாத்-மும்பை அணியின் போட்டியில் கேமரூன் க்ரீன் 100 ரன்களும் எடுத்து மொத்தம் 3 பேர் சதமடித்து, ஒரே நாள் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டியில் 3 வெவ்வேறு அணிகளின் வீரர்கள் சதங்கள் அடித்ததும் இந்த ஐபிஎல்லில்தான்.
இதுவரை 16 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில், ஹாரி ப்ரூக், வெங்கடேஷ் ஐயர், யாஷவி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ப்ரப்சிம்ரன், சுப்மன் கில், ஹெய்ன்ரிச் கிளாஸன், விராட் கோலி, கேமரூன் க்ரீன் ஆகிய 9 வீரர்கள் சதங்கள் அடித்த நிலையில், இந்த ஐபிஎல் சீசனில்தான் தனித்தனி வீரர்களாக அதிகம்பேர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் இதுவரை 6 சதங்களை அடித்து முதலிடத்தில் இருந்துவந்தார். இந்நிலையில், விராட் கோலி இந்த சீசனில் 2 சதங்கள் அடித்ததன் மூலம் இதுவரை மொத்தம் 7 சதங்கள் அடித்து, கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த விவரங்கள் எல்லாம் இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்த லீக் போட்டிகளின் முடிவுகள் மட்டுமே. இன்னும் மீதமுள்ள பிளே ஆஃப் சுற்றின் 4 போட்டிகளைக் பொறுத்து இந்த சாதனைகளில் கூடுதல் சதங்கள் சேரவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.