
2008 முதல் வருடந்தோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஐபிஎல் 16 சீசனை எட்டியுள்ளது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் நாளை துவக்க விழாவுடன் இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி துவங்க உள்ளது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணிக்கான ரசிகர்களின் ஆரவராம்தான் மைதானத்தையே அதிர வைக்கும். அதற்கேற்றாற்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னதாக 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இருந்தாலும், கடந்த ஐபிஎல் சீசனில் படுதோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் 9வது இடத்தையே பிடித்தது.
2008 முதல் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ஜொலித்து வருபவர் எம்.எஸ்.தோனி. அவரது தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டத்தை, சென்னை அணி வென்றிருந்தாலும், கடந்த முறை ஏற்பட்ட மோசமான தோல்வி இந்தமுறை ஏற்படாமல், சாம்பியன் பட்டத்தை நோக்கி பயணித்தாக வேண்டும்.
அதன்படி, சிஎஸ்கே அணி, மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தற்போது 41 வயதாகும் தோனியும் சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் நிலையில், அவர் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அந்த மூன்று ஆண்டுகளும், எனது வாழ்நாளில் மறக்கமுடியாத சிறந்த தருணமாக அமைந்தது. சிஎஸ்கே அணி வீரர்களைப் பொறுத்தவரை எப்போதுமே சிறப்பாக விளையாடுவார்கள்.
அதோடு, தோனிக்கு இது கடைசி சீசன் என்று கூறுவதை என்னால் ஏற்கவே முடியாது. அவர் நல்ல உடல் தகுதியுடன் இன்றும் இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்ச்சி மேற்கொண்டதோடு, நல்ல முனைப்போடு போட்டிகளில் பங்கேற்க ஆயத்தமாக இருப்பதோடு, தற்போது 41 வயதாகும் தோனி, இந்த வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை அவர் நிச்சயம் நிரூபிப்பார் எனவும் வாட்சன் கூறியுள்ளார்.