IPL 2023 : ரோஹித் சர்மா, திலக் வர்மா விளாசலில் மும்பை அணி முதல் வெற்றி!

IPL 2023 : ரோஹித் சர்மா, திலக் வர்மா விளாசலில் மும்பை அணி முதல் வெற்றி!
Published on

நேற்றைய போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் 16வது சீசன் போட்டியில் டெல்லி அணியும், மும்பை அணியும் மோதின. டாஸை வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட்டத்தை துவக்கினர். இந்நிலையில், பிரித்வி ஷா, 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில், ஹிரித்திக் ஷோகீன் பந்ததில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய துல், பவல், யாதவ், போரல், குல்தீப் யாதவ், நார்ட்ஜி என ஒற்றை இலக்க எண்ணுடன் ஆட்டமிழக்க, துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர், 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அக்சர் படேல் இருவரும் சற்று நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.

டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்தார்.

அதிலும் அக்சர் படேல் வழக்கம்போல் பவுலர்களை திணறடித்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். இவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 54 ரன்களைக் குவித்தார். இந்த இருவரின் ஆட்டத்தால் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களைக் குவித்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா, இஷான் கிஷான் இருவரும் களமிறங்கினர்.

ஏற்கெனவே இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை சந்தித்த நிலையில், இப்போட்டியில் எப்படியாவது ஜெயித்தாகவேண்டும் என்ற முனைப்புடன், இருவருமே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, பவுலர்களை திணறடித்து வந்தனர்.

முதல் 7 ஓவர்களில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசி வந்த நிலையில், 7.3 வது ஓவரில் இஷான் கிஷான் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 31 ரன்களைக் குவித்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

அடுத்து ரோஹித் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்த நிலையில், இவரும் அடித்து ஆட ஆரம்பித்தார். திலக் வர்மா 29 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 41 ரன்களைக் குவித்தார்.

ரோஹித் சர்மா 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 65 ரன்களைக் குவித்தார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா, திலக் வர்மா இருவரின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்ரான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com