
ஐபிஎல் 16வது சீசன் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதில், முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்யாசத்தில் 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அடுத்து இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற மும்பை அணி பவுலிங்கைத் தேர்வு செய்துது.
இதையடுத்து கொல்கத்தா அணியின் சார்பாக குர்பாஸ், ஜெகதீசன் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், பெரிதும் சோபிக்காமல் குர்பாஸ் 8 ரன்னிலும், ஜெகதீசன் ரன்கள் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.
அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் நிதிஷ் ராணா, ஷர்துல் தாக்கூர், ரிங்கு சிங், ஆண்ட்ரூ ரஸல் என குறைவான ரன்களையே எடுத்தனர்.
வெங்கடேஷ் ஐயர் யாரும் எதிர்பார்க்காத அதிரடி ஆட்டத்தை நேற்று வெளிப்படுத்தினார். அவர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என விளாசி 104 ரன்களை எடுத்து அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார். அவர் தனது 104 ரன்களில் 26 ரன்களை மட்டுமே ஓடி எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா, இஷான் கிஷான் இருவரும் களமிறங்கினர். நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர்கள் அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் தனிஆளாக மும்பை அணியை திணறச் செய்தாலும், மும்பை அணியின், ரோஹித் சர்மா 20, இஷான் கிஷான் 58, சூர்யகுமார் யாதவ் 43, திலக் வர்மா 30, டிம் டேவிட் 24 என அவரவர் பங்குக்கு சிறப்பாக விளையாடினர்.
இதையடுத்து மும்பை அணி 17.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து 14 பந்துகள் மீதமுள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.