நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் எந்தெந்த வீரர்கள் விருதுகளை வென்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
முதலில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாயும், இறுதிப்போட்டி வரை வந்த ஹைத்ராபாத் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதனையடுத்து, அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது. இதில் விராட் கோலி அதிகபட்சமாக 741 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினர். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
அதேபோல், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கு பர்ப்பிள் தொப்பி வழங்கப்படும். பஞ்சாப் அணியின் பவுலர் ஹர்ஷல் பட்டேல், பர்ப்பிள் தொப்பியை தன் வசம் ஆக்கினார். இவர் மொத்தம் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் இவருக்கு பரிசுத் தொகையாக 10 லட்சம் வழங்கப்பட்டது. அதேபோன்று வளர்ந்து வரும் வீரருக்கான விருதை ஹைத்ராபாத் அணியின் நிதிஷ்குமார் ரெட்டி கைப்பற்றினார்.
இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் தொடரில் மிகவும் மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை கேகேஆர் அணியின் சுனில் நரைன் கைப்பற்றினார். இவருக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல் சுனில் நரைனுக்கு கேம் சேஞ்சர் விருதும் வழங்கப்பட்டது. பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருதை வென்ற ஹைத்ராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. Perfect Catch of the season விருதை கொல்கத்தா அணியின் ரமன்தீப் சிங் வென்றார்.
விதிகளைப் பின்பற்றி நன்மதிப்புடன் விளையாடிய அணிக்கு Fair Play விருது வழங்கப்படும். அந்த விருதை ஹைத்ராபாத் அணி கைப்பற்றியது. இதனையடுத்து நடப்பு ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த பரசுத்தொகை 46 கோடியே 50 லட்சம் ரூபாயாகும். இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.