சொந்த மண்ணில் ரோஹித், விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா விளையாடும் கடைசி போட்டி இதுதானா?
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்தநிலையில், இந்தப் போட்டியே ரோஹித் ஷர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து சொந்த மண்ணில் விளையாடும் கடைசி போட்டி என்ற செய்திகள் வந்துள்ளன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் சொந்த மண்ணிலேயே இந்திய அணி இதுபோல தொடரை இழந்திருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது ஹர்பஜன் சிங் போன்ற முன்னணி வீரர்களை நீக்கிவிட்டு ஜடேஜா, அஸ்வின் ஆகியோரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தனர். ஆகையால், இம்முறை சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுபோல பல மாற்றங்களை கொண்டு வர பிசிசிஐ தயாராகி வருகிறது.
இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆகவே இதுதான் ரோகித் ஷர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு சொந்த மண்ணில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் விராட் கோலி மற்றும் ஜடேஜாவின் ஃபார்மை பொறுத்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. எனினும், கடந்த முறை பிசிசிஐ எடுத்த அதே முடிவை இம்முறை எடுத்தால், முன்னணி வீரர்களை இனி இந்திய மைதானத்தில் பார்ப்பது கடினம்தான்.