Games
Games

விளையாட்டுகளின் தோற்றம் இப்படித்தான் இருந்திருக்குமோ?

Published on

விளையாட்டுகள் மனிதரது இயற்கையான இயக்கங்களின் இனிய தொகுப்புகளாகும். அதாவது, நிற்றல், நடத்தல், ஓடுதல், தாண்டுதல், குதித்தல், இறங்குதல், எறிதல், பிடித்தல், அடித்தல், போன்ற பல்வேறு வகையான உடல் உறுப்புகளின் ஒருமித்த இயக்கங்களின் உன்னத வெளிபாடுகளே இந்த விளையாட்டுகள். 

துன்பம் தராத இன்பம் தருகின்ற பொருட்கள் 4 என்று கூறிய தொல்காப்பியர், அவற்றை செல்வம், புகழ், புணர்வு, விளையாட்டு என்று சுவைப்பட தொகுத்துக் காட்டுகிறார். 

ஆனந்த ரகசியம்:

விளையாட்டுகளில் பங்கு பெறுபவர்கள் தன்னுள்ளே தோன்றுகின்ற பயங்கர நினைவுகளிலிருந்து எளிதாக விடுபடுகின்றனர். 

தனக்குள்ள பலம் என்ன? பலவீனம் என்ன? திறமையின் அளவு எது, தனது வலிமை எத்தகையது, செயலாற்றும் தன்மை, நெஞ்சுரம் எவ்வளவு? புத்திசாலித்தனம், உள்ளுணர்வுகளை விரைந்து வெளிபடுத்தி இயங்கும் ஆற்றல், துன்பத்தையும், நெருக்கடிகளையும், சமாளிக்கின்ற சாமர்த்தியம், எப்படி?... என்பன போன்ற எண்ணெற்ற அரிய குணங்களை வளர்க்கின்ற அதிசய ஆற்றலை வளர்த்து வருகிறது விளையாட்டு. 

வாழ்க்கையும் விளையாட்டும்:

வாழ்க்கையும், விளையாட்டும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றுதான். வாழ்க்கையில் நாம் செய்யும் ஒரு வேலை அல்லது ஒரு செயலை விளையாட்டாக கருத்தூன்றி செய்தால் மிகவும் உற்சாகமாகவும், திருப்தியாகவும், வெற்றியுடனும் செய்து  முடிப்போம். 

வாழ்க்கை என்பது ஒரு அழகான கிண்ணம். அதில் விளையாட்டு என்னும் மகா சக்தி நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்ற சுவையான பழரசம் ஊற்றபட்டிருக்கிறது.

எண்ணத்தில் தேர்ந்து கிண்ணத்தை எடுத்து பருகுவோர் உடல், வண்ணத்தில் பொலிவுறும். நினைவுகளில் தெளிவும், நிலையில் வலிவும், கொண்டு நிம்மதியுடன் வாழ்கின்றனர். 

இதையும் படியுங்கள்:
உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!
Games

விளையாட்டின் இயல்புகள்:

விளையாட்டுகள் மனிதர்களுக்குள்ளே இயற்கையாக அரும்பி மலர்ந்து வரும். எப்போதும் எல்லோராலும் விரும்பப்படும். எந்த வயதினரும், எந்த பிரிவினரும் சாதிமத பேதமின்றி, ஆண் பெண் வேறுபாடு இன்றி, ஏழை செல்வர் என்ற ஏற்றதாழ்வு இன்றி, சமமாக பங்கு பெறுகின்ற அளவுக்கு எளிமை நிறைந்தது ஆகும். 

விளையாட்டுகளின் தோற்றம்:

ஆதி காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் மிருகங்களின் பசிவேக தாக்குதலுக்கு பயந்து  பல சமயங்களில் இரையாகினர். சில சமயங்களில் தப்பித்து கொண்டனர்.

அது எவ்வாறு நடந்தது?

மிருகங்களின் தாக்குதலுக்கு பயந்து வேகமாக ஓடியிருப்பார்கள். அது தான் ஓட்டபந்தயமாக மாறியது. பள்ளங்களை தாண்டியிருப்பார்கள், அது தான் நீளந்தாண்டலாக மாறியது. புதர்களை, தடைகளை தாண்டியிருப்பார்கள். அதுதான் உயரந்தாண்டலாக மாறியது. கற்களை, கம்புகளை வீசி மிருகங்களை விரட்டிய முறைதான் எறியும் விளையாட்டுகளாகிய குண்டு எறிதல், வேலெறிதலாக மாறியது. இந்த விளையாட்டுகள் முதல் கட்ட தோற்றம் ஆகும். 

இதையும் படியுங்கள்:
சிக்ஸ் அடிச்சா அவுட்! எந்த நாட்டில் தெரியுமா?
Games

மிருகங்களை எதிர்த்து தாக்கி அவற்றின் மாமிசங்களை உண்ண, அதன் சுவை அறிந்து, இதுவே மேலும் மிருகங்களை தேடி கொல்ல தூண்டியது. அதன் ஆர்வம் தான் வேட்டையாடுதல். கொல்ல பயன்பட்ட ஆயுதங்கள் கூரான கற்கள். கூரான தடி. இவைகள் தான் வேகமாக வேலை செய்யும் அம்பாக மாறின. இது இரண்டாவது கட்ட தோற்றம் ஆகும். 

மூன்றாம் கட்ட விளையாட்டு தோற்றம் கற்கால மனித இனம் ஓரிடத்தில் தங்கி ஓய்வினை அனுபவித்து ஒன்று கூடி சமுதாய வாழ்க்கையை வாழ தொடங்கிய போது  ஏற்பட்டிருக்கலாம். 

நாம் பள்ளிகால பருவத்தில் இந்த விளையாட்டுகளில் எல்லாம் பங்கெடுத்து விளையாடி இருக்கிறோம். இனி வரும் சந்ததியினரையும் விளையாட்டுகளில் பங்கு பெற செய்து, பலருடன் பழகி, பல்வேறு இன்பமயமான சூழ்நிலைகளை அறிய செய்வோம்.

logo
Kalki Online
kalkionline.com