கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் விளையாடாத இஷான் கிஷன், இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட முடியும் என்றும், இனி எந்த தொடர்களிலும் விளையாட முடியாது என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பேசியிருக்கிறார்.
முதலில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐய்யரை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியது. இதற்குக் காரணம் அவர்கள் இருவரையும் பிசிசிஐ ரஞ்சிப் போட்டியில் விளையாட வேண்டுமென்று கூறியும் விளையாடமல், ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயிற்சி செய்து வந்ததால்தான்.
அதேபோல் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட கூறியும் விளையாடததால், இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இல்லாமலே இருந்து வந்தது. இதனால், அவர் சில காலம் கிரிக்கெட் விளையாடவில்லை. பின்னர் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.
அந்தவகையில், இஷன் கிஷன் தற்போது புச்சி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில்கூட ஒரு சதம் அடித்தார். இதனையடுத்து அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என பலரும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி பேசியுள்ளார். அதாவது, ”அவர் என்னதான் ஆடினாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷனுக்கு தற்போது போட்டி அதிகரித்து இருக்கிறது.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பி இருப்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேலுக்கும் இனி இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை உள்ளது.
இந்த காரணங்களால் இஷான் கிஷனுக்கு குறைந்தபட்சம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை இந்திய அணியில் இடம் கிடைக்காது. சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் ஆடுவது சந்தேகம்தான். இஷான் கிஷன் இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்துதல் வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.