ஜெய்தேவ் உனாட்கட் மகத்தான சாதனை!

ஜெய்தேவ் உனாட்கட் மகத்தான சாதனை!

கிரிக்கெட் வரலாற்றில் சாதனைகள் நிகழ்த்தப்படுவதும், அது முறியடிக்கப்படுவதும் அவ்வப்போது நிகழத்தான் செய்யும். ஆனால், 88 வருட ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாமல் முதல் முறையாக முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனை நிகழ்த்தியதோடு, 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜெய்தேவ் உனாட்கட்.

தனது 19வது வயதில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுகமான ஜெயதேவ் உனாட்கட், அதற்குப் பின் 12 வருடங்கள் கழித்து வங்கதேச அணிக்கு எதிராக தனது 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில் தற்போது ரஞ்சிக்கோப்பையில் விளையாடி வரும் உனாட்கட் புதிய சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

சௌராஷ்ட்ரா அணிக்கும் டெல்லி அணிக்கும் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சௌராஷ்ட்ரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாட்கட் ஆட்டத்தின் முதல் ஓவரை வீச வந்தார். தனது திறமையான பௌலிங்கை வெளிப்படுத்தி எதிரணியை முதல் ஓவரிலேயே திணறடித்தார். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டெல்லி அணியின் தொடக்க வீரர் துருவ் சோரேவை உனாட்கட் டக் அவுட் முறையில் அவுட் ஆக்கினார். அதைத் தொடர்ந்து, நான்காவது, ஐந்தாவது பந்துகளில் வைபவ் ராவல், யாஷ் துல் இருவரையும் வீழ்த்தி உனாட்கட் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இதுவரை யாருமே முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதில்லை. முன்னதாக, கர்நாடக வீரர் வினய் குமார் 2017 -18 ஆம் ஆண்டு சீசனில் நடைபெற்ற போட்டியில், முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டும், மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியதுமே ஹாட்ரிக் சாதனையாக கருதப்பட்டது. தற்போது இவர் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளளார்.

இத்தோடு நிற்காமல், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை உனாட்கட் வீசவந்த நிலையில், அந்த ஓவரிலும் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தவே டெல்லி அணி ஆட்டம் கண்டது.

இதைத்தொடர்ந்து, ஹிர்திக் ஷோகேன் பொறுப்புடன் விளையாடி, 68 ரன்கள் சேர்த்த நிலையில், டெல்லி அணி 133 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த போட்டியில் 12 ஓவர்கள் வீசிய ஜெய்தேவ் உனாட்கட் 39 ரன்களை விட்டுக் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ஜெயதேவ் உனாட்கட்டின் சிறப்பான ஆட்டமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com