இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயதாகியும் ஓய்வு பெறாமல், இந்திய அணியை எதிர்க்கொள்ள இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளார் என்ற செய்தி இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இந்திய வீரர்களுக்கும் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பகை உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து விளையாடிய இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் ஆண்டர்சன். அந்த தொடரில் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களை வசைப்பாடிக் கொண்டே இருந்தார். அது இந்திய வீரர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் 2014ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றபோது ரவீந்திர ஜடேஜாவிற்கும் ஆண்டர்சனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருவரும் மாற்றி மாற்றி புகார் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதற்காக ஜடேஜாவுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்த தவறும் செய்யவில்லை என்று ஐசிசி கூறியது. ஆனால் ஜடேஜா அளித்த புகாரில் ஆண்டர்சன் அவரைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த தொடர் முழுவதும் இரண்டு அணிகளும் மாறி மாறி சீண்டிக்கொண்டே இருந்தனர். அதே தொடரில் ஆண்டர்சன் விராட் கோலியை நான்கு முறை விக்கெட் இழக்கச் செய்தார்.
இதனால் 2016ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் விராட் கோலி வெறித்தனமாக ரன் குவித்தார். அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆண்டர்சன் விராட் பேட்டிங்கில் நிறைய தவறுள்ளது என்றும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதை மறைக்கிறது என்றும் போட்டியின் இடையே ஒரு பேட்டியில் கூறினார். இதனால் கோபமான அஸ்வின், ”தோல்வியை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று காட்டமாக கூறினார். இது அப்போது ஒரு பரப்பரப்பு விவாதமாக இருந்தது.
அதேபோல் பூம்ராவுக்கும் ஆண்டர்சனுக்கும் பகைமை வளர்ந்தது. பூம்ரா தொடர்ந்து ஆண்டர்சன் பேட்டிங்கில் பவுன்சர்கள் வீசிக்கொண்டே இருந்தார். இது ஆண்டர்சனை பல இடங்களில் தாக்கியது. இதனால் கடும் கோபம் கொண்ட ஆண்டர்சன் பவுலிங் செய்யும்போது இந்திய வீரர்களைத் திட்டிக்கொண்டே பலமுறை பவுன்சர்களால் தாக்கினார். இதற்கு பதில் அளிக்க இரண்டாவது இன்னிங்ஸில் பூம்ராவும் அஸ்வினும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினார்கள். வீரர்களுக்குள் நிகழ்ந்த இப்போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வயதாகியும் ஓய்வு பெறாமல், டெஸ்ட் போட்டியில் கடைசி முறையாக இந்திய அணிக்கு எதிராக மோதவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஆண்டர்சன் சென்ற ஆண்டே ஓய்வு பெற்றிருக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12 ஆண்டுகளாக அவருடன் மோதிய இந்திய வீரர்களும் அணியில் உள்ளனர். ஆகையால் இந்த டெஸ்ட் தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் உண்மை.