அவமானங்களை கடந்த ஆட்டநாயகனான அமிர் ஹுசைன்...திரைப்படமாகும் பாரா கிரிக்கெட்டரின் சாதனை பயணம்!

Cricketer Amir Hussain lone
Cricketer Amir Hussain lone
Published on

துப்பாக்கி குண்டுகளுக்கும், தீவிரவாத தாக்குதலுக்காக மட்டுமே அடிக்கடி செய்திகளில் உச்சரிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலம் இன்று சாதனையாளர்களின் பூமியாக மாறியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கவனம்பெற்று வருகின்றனர் காஷ்மீர் விளையாட்டு வீரர்கள்.

அந்தவகையில், சமீபத்தில் இணையத்தை ஆக்கிரமித்த பெயர்தான் அமீர் ஹுசைன். எதிர்ப்பாராத விபத்தினால் இரு கைகளையும் இழந்த அமீர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரா கிரிக்கெட்டில் ஜம்மு காஷ்மீரின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இவர் காலால் பவுலிங் செய்தும் கழுத்து மற்றும் தோள்பட்டையைப் பயன்படுத்தி பேட்டிங் செய்தும் வருகிறார். அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் அமீர் ஹுசைனின் வாழ்க்கை பயணத்தைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

அமிர் ஹுசைன் 1990ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் உள்ள பிஜ்பெஹாரா கிராமத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது தந்தையின் மில்லில் நடந்த ஒரு விபத்தினால் இரு கைகளையும் இழந்தார். உயிர் பிழைக்கவே மிகவும் கஷ்டப்பட்ட அமீர் ஹுசைன் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப கிட்டத்தட்ட ஆறு வருடங்களானது.

அந்த ஆறு வருடங்களில் உறவினர்கள் அனைவரும் அவர் தந்தையிடம் ஹுசைனை கருனைகொலை செய்யச் சொல்லி மறைமுகமாக கூறியுள்ளனர். ஆனால் ஹுசைனின் தந்தை தனது சொத்துக்களை எல்லாம் விற்று மகனின் உயிரைக் காப்பாற்றினார்.

உறவினர்களின் புறக்கணிப்பை பார்த்து வளர்ந்த ஹுசைனுக்கு தான் பயனில்லாதவன் அல்ல என்று நிரூப்பிக்க தோன்றியது. இருகைகள் இல்லையென்றால் என்ன? இரு கால்கள் உள்ளதே, அதைவைத்து சாதிப்போம் என்று தனக்குதானே உறுதி அளித்துக்கொண்டார்.

இவருடைய இந்த தன்னம்பிக்கைக்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், ஹுசைன் யாருடனும் சாராமல் இருப்பதுதான். ஹுசைன் எட்டாவது படிக்கும்போது ஒருமுறை சலையில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாரா விதமாக அவர் அணிந்திருந்த கால்சட்டை கழன்றுவிட்டது.

அழுதுக்கொண்டே நின்ற ஹுசைன் வழிப்போக்கர்களிடம் உதவி கேட்டார். ஆனால் எவருமே அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதன்பின் ஒருமுறை வகுப்பில் ஹுசைனுக்கு எழுதிக் கொடுக்கும்படி ஆசிரியர் ஒரு மாணவரிடம் கூறினார். அதற்கு அந்த மாணவர், “ நான் ஒன்றும் அவன் அடிமையில்லை” என்று கூறிவிட்டார். இதுபோல் சாப்பிடுவதற்கும் யாரும் உதவி செய்யவில்லை.

இவற்றை கருத்தில் கொண்ட ஹுசைன் எடுத்த முடிவுத்தான் இனி யாரையுமே சார்ந்திருக்க கூடாது என்பது. காலால் மரத்திலிருந்த வால்நட்டை அடித்து அதனை கடையில் விற்று ஒரு பேனாவும் பேப்பரும் வாங்கிக்கொண்டார். அதனை கழுத்திற்கும் தோள்பட்டைக்கும் இடையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கால்களால் எழுத தொடர் முயற்சிகள் மூலம் கற்றுக்கொண்டார்.

அதேபோல் ஸ்பூன் பயன்படுத்தி காலால் எடுத்து சாப்பிட கற்றுக்கொண்டார். இதுதான் அவரின் கிரிக்கெட் பயணத்திற்கும் உதவியாக இருந்தது. கிரிக்கெட்டை விரும்பி பார்க்கும் ஹுசைன் பக்கத்து வீட்டில் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியை கதவு பக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். இந்தியா வெற்றிபெற போகும் சமையத்தில் அந்த வீட்டில் உள்ள ஒரு பெண் கதவை அடித்து சாத்திவிட்டார்.

அப்போட்டியில் சச்சின் 90 எடுத்தார். இந்தியா வெற்றிபெற்றது. ஆனால் ஹுசைனுக்கு அவமானமே மிஞ்சியது. ஆனால் அந்த போட்டி அமீரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போட்டி முடிந்த கையோடு ஹுசைன் வீட்டுக்கு சென்று பந்தை காலால் பிடிக்கவும் பேட்டை கழுத்து மற்றும் தோள்பட்டையின் உதவியோடு பிடிக்கவும் முயற்சி செய்தார்.

Cricketer Amir Hussain lone
Cricketer Amir Hussain lone admin.risingkashmir.com

அவரின் விடாமுயற்சியால் சில நாட்களில் அதில் வெற்றியும் பெற்றார். ஹுசைன் பள்ளியில் இருந்த ஒரு ஆசிரியர் ஹுசைனின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தைக் கண்டுபிடித்து ஒரு பாரா கிரிக்கெட் பயிற்சியாளரிடம் ஹுசைனை ஒப்படைத்தார். அந்தவகையில் இவர் 2013ம் ஆண்டு ஒரு உள்ளூர் போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தை ஆடினார்.

முதல் ஓவரில் ஹுசைன் தனது கால்களைப் பயன்படுத்தி இரண்டு பந்து வீசியதில் அந்த பேட்ஸ்மேன் வரிசையாக இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அவர் ஒரு யாக்கர் என்று சுதாரித்துக்கொண்ட ஹுசைன் அதற்கு ஏற்றவாரு அடுத்தடுத்த பந்துகளை வீசினார். முதல் ஓவரிலையே அந்த யாக்கர் மற்றும் அதன் அடுத்து வந்த பேட்ஸ்மேன் ஒருவரையும் விக்கெட் இழக்கச்செய்து ஆட்ட நாயகன் ஆனார் ஹுசைன்.

அதன்பின்னர் அந்த ஆண்டு டெல்லியில் தேசிய வீரராக விளையாடினார். சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஆசீஷ் நேஹ்ரா ஆகியோருக்கு இவரின் அதீத திறமை தெரியவந்தது. ஆகையால் நேஹ்ரா 2016ம் ஆண்டு டி20 உலககோப்பையின் அரை இறுதிப் போட்டியை காண அவரை அழைத்துச் சென்றார்.

images.yourstory.com

2017ம் ஆண்டு ஹுசைனுக்கு பஞ்சாப் ஸ்வாபிமான் விருது வழங்கப்பட்டது. இவரின் திறமை மற்றும் தொடர் முயற்சியால் தற்போது ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் கேப்டனாக உயர்ந்துள்ளார். மேலும் ஹுசைனின் போராட்டங்களையும் வளர்ச்சிகளையும் பார்த்து ஆச்சர்யமான Pickle entertainment என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இவரின் கதையைப் படமாக்க உள்ளனர்.

இப்படத்தில் விக்கி கௌஷல், அமிர் ஹுசைனாக நடிப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. சாதனைப் படைப்பதற்கு தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே காரணம் என்பதை நிரூபித்தார் அமிர் ஹுசைன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com