
ஒவ்வொரு வீரரின் கிரிக்கெட் பயணத்திலும், யாரோ ஒருவர் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருப்பார். அவர்கள் வழங்கிய சிறு அறிவுரை கூட மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல் பெங்களூர் அணி வீரர் ஜிதேஷ் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார் ஒரு முன்னாள் வீரர். யார் அந்த முன்னாள் வீரர்? ஜிதேஷ் சர்மாவின் முன்னேற்றத்திற்கு அவர் உதவியது எப்படி?
இன்றைய நவீன கால கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் வீரர்கள் தான் பெரிதும் கொண்டாடப்படுகிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு வீரரின் செயல்பாட்டிற்கும் பயிற்சியாளர் தான் முக்கிய திருப்புமுனையாக இருப்பார். நாம் செய்யும் சிறுசிறு தவறுகளையும் சரிசெய்யும் பயிற்சியாளரால் தான், இங்கு பல வீரர்கள் வெற்றிகரமாக ரன்களைக் குவிக்கின்றனர். அவ்வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக், ஜிதேஷ் சர்மாவின் பேட்டிங் ஸ்டைலை முற்றிலும் மாற்றி விட்டார்.
ஜிதேஷ் சர்மா ஒரு நல்ல விக்கெட் கீப்பங் பேட்டர் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது இவர் அதிரடியான ஃபினிஷராக மாறியிருப்பது தினேஷ் கார்த்திக்கின் பயிற்சியால் தான். 2024 இல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஜிதேஷ் சர்மா, பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. இந்த வருடம் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இவருக்கு தொடக்கம் முதலே தினேஷ் கார்த்திக் சிறப்பான முறையில் பயிற்சியளித்துள்ளார்.
கிரிக்கெட்டில் எல்லா பக்கமும் பவுண்டரி விளாசும் வீரர் என்றால், பலருக்கும் ஏபி டிவில்லியர்ஸ் தான் நினைவுக்கு வருவார். அவருக்குப் பின் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் 360 டிகிரியில் பேட்டை சுழற்றி ஆடினர். கடந்த ஆண்டோடு தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற நிலையில், பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். தனது பொறுப்பில் முழு கவனம் செலுத்தி வந்த தினேஷ் கார்த்திக், ஜிதேஷ் சர்மாவை 360 டிகிரி பேட்டராக உருவாக்கி வருகிறார்.
பெங்களூர் அணிக்கு மிகச் சிறந்த ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் விளங்கினார். அவரது இந்த இடத்தை தற்போது ஜிதேஷ் சர்மா கச்சிதமாக நிரப்பி விட்டார் என்றே சொல்ல வேண்டும். கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா, பேட்டிங்கில் பெங்களூர் அணிக்கு பலம் சேர்க்கிறார்.
தனது பேட்டிங் குறித்து சமீபத்தில் மனம் திறந்த ஜிதேஷ் சர்மா, “ஐபிஎல் கிரிக்கெட் பயணம் எனக்கு மிகச் சிறந்ததாக அமைந்துள்ளது. கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை. அதன்பிறகு தினேஷ் கார்த்திக் உதவியால் பயிற்சியை மேற்கொண்டேன். நான் இப்போது ஆடும் பல ஷாட்டுகள், தினேஷ் கார்த்திக்கின் ஷாட்டுகள் தான். என்னால் 360 டிகிரியிலும் பவுண்டரிகளை விளாச முடியும் என்ற நம்பிக்கையுடன் எனக்கு அவர் பயிற்சியளித்தார். தவறு செய்யாத வீரர்களே இல்லை. பயிற்சியின் மூலம் அனைத்தையும் சரிசெய்ய முடியும் என எனக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தார் தினேஷ் கார்த்திக். அவரது பயிற்சியால் தான் களத்தில் இன்று என்னால் நன்றாக செயல்பட முடிகிறது” என்று ஜிதேஷ் சர்மா கூறினார்.