காமன்வெல்த் கேம்ஸ்; லான் பவுல்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

காமன்வெல்த் கேம்ஸ்; லான் பவுல்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!
Published on

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.  

இந்த லான் பவுல்ஸ் இறுதிப் போட்டியில் 4 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி, தென்ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி, 17-10 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றது.

காமன்வெல்த் போட்டிகளில் 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் லான் பவுல்ஸ் போட்டியில், இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது. அதுவும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

இதேபோல், காமன்வெல்த் தொடரின் ஆடவர் அணிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில், இந்தியாசிங்கப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 3-1 என்ற விகிதத்தில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றது.

ஆடவருக்கான, 96 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீரர் விகாஷ் தாகூர் களமாடினார். இவர், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் என இரு பிரிவுகளிலும் மொத்தம் 346 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல், நியூசிலாந்து வீரர் பால் கோல் உடன் மோதினார். இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து வீரர் 3-0 என்ற கணக்கில் வென்றார்.

மகளிர் ஹாக்கித் தொடரின் '' பிரிவு லீக் சுற்றில் இந்திய அணி, தனது மூன்றாவது ஆட்டத்தில் உள்ளூர் அணியான இங்கிலாந்துடன் மோதியது. இதில், இங்கிலாந்து 3-1 என வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

தடகளத்தை பொறுத்தவரை ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் மற்றும் முகமது அனாஸ் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

இதன் மூலம், இறுதிச் சுற்றுக்கு முன்னேறி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர். அத்துடன், மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு அணிக்கான இறுதிப்போட்டியில், மலேஷியாவை இந்தியா எதிர்கொண்டது. இதில், 1-க்கு மூன்று என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

5-வது நாள் முடிவில், இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதன்மூலம், அணிகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com