ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பைக்கான சூப்பர் 4 சுற்று நேற்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவை வென்று இலங்கை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேற்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை வீரர்களின் பந்து வீச்சில் சற்று தடுமாறிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதில்
அதிகபட்சமாக இந்திய அணி கேப்டன் ரோகித் 72 ரன்கள் எடுத்திருந்தார். விராட் கோலி ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டாக, அடுத்தடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்களின் முதல் பார்ட்னர்ஷிப் பலமாக அமைந்தது. பதும் மற்றும் குசல் ஆகியோர் அரை சதத்தை தாண்டி ரன்களை குவித்தனர்.
இந்த பார்ட்னர்ஷிப் மட்டுமே 109 ரன்களை எடுத்திருந்தால், அணியின் வெற்றி எளிதாக அமைந்தது. 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால், இப்போடியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.