பின்லாந்து நாட்டின் தம்பேர் நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி தாகர் என்னும் 94 வயதுப் பெண்மணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
-இதுகுறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் தன் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
இந்தியாவைச் சேர்ந்த 94 வயதான பகவானி தேவி, பின்லாந்து நாட்டின் தம்பேர் நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.
-இவ்வாறு இந்திய விளையாட்டு அமைச்சகம் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும் வயதான பகவானி தேவி ஓட்டப்பந்தயம் மட்டுமன்றி குண்டு எறிதல் போட்டியிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 35 வயதுக்கு மேற்பட்டோருக்காக நடத்தப்ப்பட்டன. இந்த போட்டிகள் கடந்த ஜூன் 29-ல் தொடங்கி இம்மாதம் 10-ம் தேதிவரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் பங்கேற்ற பகவானி தேவி ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றது மட்டுமன்றி, குண்டு எறிதல் போட்டி உட்பட மற்ற 2 போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
பகவானியின் சாதனை குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் பாராட்டியது குறிப்பிடத் தக்கது.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா முதல்வர் மன்ஹோர் லால் கட்டர் உள்ளிட்டோரும் பகவானி தேவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.