சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று காலையில் தமிழகம் வந்து சேர்ந்தது.
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில், வருகிற 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கொண்டு செல்லும் மராத்தான் ஓட்டத்தை டெல்லியில் ஜூன் 19-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த ஜோதி நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி, இன்று காலையில் தமிழகத்தில் கோவைக்கு வந்து சேர்ந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் , அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இந்த ஜோதி, மாலையில் சேலம் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.