ஆஸ்திரேலிய இந்திய அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான பவுலர் ஒருவர் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது.
இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது. இதனையடுத்து நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது. இந்திய அணி வேகப்பந்து வீச்சுக்கு முழுக்க முழுக்க பும்ராவையே நம்பி இருக்கிறது.
பும்ராவின் ஓவர் முடிந்துவிட்டால், அடுத்து ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது. இதனால், பும்ராவை கட்டாயப்படுத்தி, மீண்டும் ஓவர்களை வீச வைக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகள் காரணமாக, பும்ரா ஓய்வின்றி அதிக ஓவர்களை வீச வேண்டிய தேவையும் இருக்கிறது. பும்ராவுக்கு சரியான பார்ட்னர்ஷிப் பௌலர் இல்லாததுதான் இத்தனைக்கும் காரணம்.
சிராஜுக்கும் ஆஸ்திரேலியா பிட்ச் சரிவரவில்லை. இது அணிக்கு மிகவும் பின்னடைவாக இருக்கிறது.
அதேபோல் மூன்றாவது போட்டியிலிருந்து விளையாடியவர் ஆகாஷ் தீப். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளும் நான்காவது போட்டியில் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ஓவர்கள் வீசி இருப்பதால் அவரின் முதுகுப்பகுதியில் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 75 ஓவர்கள் வீசி இருக்கிறார். ஆகையால், அவருக்கு பதிலாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ஹர்ஷித் ராணா களமிறங்கவுள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளன. இதனால் முகமது சிராஜ், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நன்றாக செயல்பட்டால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகளும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.