தண்ணீர் கொடுக்க வந்து, பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டிய கே.எல்.ராகுல்!

KL Rahul
KL Rahul

சியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகளின் சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று முன்தினம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. முன்னதாக, இந்தப் போட்டி மழையால் தடைபட்டால் மறுநாளும் தொடரும் என்று இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்ற இந்தப் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இந்தப் போட்டியின் மீதி ஆட்டம் நாளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 8 ரன்களும் கே.எல்.ராகுல் 17 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி. போகப் போக புயலென மாறி வெளுத்து வாங்கத் தொடங்கினர். இதன் மூலம் கே.எல்.ராகுல் ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது 6வது சதத்தைப் பூர்த்தி செய்தார். அதேபோல், விராட் கோலியும் ஒரு நாள் சர்வதேச போட்டியில் தனது 47வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 356 ரன்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு, ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, மிகப்பெரிய இலக்கை எட்டிப் பிடிக்க வேகமாக அடித்து ஆடத் தொடங்கி. சீரான இடைவெளியில் தனது 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தார் கே.எல்.ராகுல். அப்போது அவர், “நேற்று முன்தினம் இந்தப் போட்டிக்கான டாஸ் போடுவதற்கு 5 நிமிடங்கள் முன்பு என்னிடம் பயிற்சியாளர் டிராவிட் வந்து, ‘இந்தப் போட்டியில் நீ விளையாடுகிறாய்’ என்று கூறினார். ஆச்சரியத்தில் உறைந்துபோன நான், ‘விளையாடுவதற்காக எந்த உபகரணங்களையும் நான் மைதானத்துக்குக் கொண்டுவரவில்லையே. அதுமட்டுமின்றி, நான் விளையாடும் நமது வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையைத்தான் செய்யப்போகிறேன் என்று நினைத்தே மைதானத்துக்கு வந்தேன்’ என்று கூறினேன். ஆனாலும், நான் இந்தப் போட்டியில் விளையாட வைக்கப்பட்டேன். சிறப்பாகவும் என்னால் இந்தப் போட்டியில் செயல்பட முடிந்தது என நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டின்போது காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்துவிட்டு இந்த சீசனில்தான் மீண்டும் விளையாட ஆரம்பித்திருக்கிறார் கே.எல்.ராகுல். தேர்வுக் குழுவுக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களைக் கடந்து சூப்பர் 4 போட்டியில், அதுவும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்து தன்னை நிரூபித்திருக்கிறார் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com