குரோஷியாவை தோற்கடித்து அர்ஜெண்டினா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் தானும் இறுதிச் சுற்றை அடைந்தது.
ஆக அர்ஜென்டினாவும் பிரான்ஸும் இறுதிச் சுற்றில் மோத உள்ளன.
இதற்கு முன் 2018 உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதின. அதில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. கடைசி நிமிடம் வரை ரசிகர்களை பரபரப்பாக வைத்திருந்த அந்தப் போட்டியில் 4-3 கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. உலகக் கோப்பை போட்டி ஒன்றில் அர்ஜென்டினா அணி பிரான்சை வென்ற காட்சி இறுதியாக நடந்தது 2009ல்தான்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அர்ஜென்டினா, ஃபிரான்ஸ் அணிகள் ஒவ்வொன்றும் இரு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளன.
இரண்டு அணிகளும் மட்டுமல்ல உலகமே தற்போது ஆர்வம்பொங்க எதிர்நோக்கி இருக்கும் அந்தக் கோப்பையைப் பற்றி அறிந்து கொள்வோமா?
இரண்டு கோடி டாலர் மதிப்பு மிக்கது ஃபிஃபா உலகக் கோப்பை. சும்மாவா, முழுவதும் தங்கத்தினால் ஆனது. 18 கேரட் தங்கம். மொத்த எடை 6 கிலோ. கீழ்ப்புறம் வட்ட வடிவத்தில் அமைந்த பச்சை மரகதக் கல்லால் ஆனது. கோப்பை ஒருபோதும் சூரிய ஒளியில் மங்காது. காலத்தினால் சிதையாது. இரண்டு மனிதர்கள் உலகை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போன்று இது காணப்படுகிறது.
இந்த கோப்பையை வடிவமைத்தவர் இத்தாலியக் கலை நிபுணரான சில்வியோ கஜங்கியா. இதை தயாரித்தது இத்தாலியில் இயங்கும் ஆர்டிஸ்டிகோ பெர்டோனி என்ற நிறுவனம்.
ஆனால் கால்பந்து உலகக் கோப்பை அறிமுகமானதிலிருந்து இந்தக் கோப்பை இருக்கவில்லை. முதலில் வேறொரு கோப்பை வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கோப்பையின் பெயர் விக்டரி என்பதாக இருந்தது. பின்பு அது ஜூல்ஸ் ரமெட் கோப்பை என்று பெயர் மாறியது. அந்தப் பெயர் கொண்ட ஃபிஃபா தலைவருக்கு கௌரவம் சேர்க்கும் வகையில் அந்தப் பெயர் மாற்றம் நிகழ்த்தப்பட்டது. அந்தக் கோப்பை வெள்ளியில் வடிவமைக்கப்பட்டு அதன் மேலே தங்க தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. கிரேக்க வெற்றி கடவுளான நைக் என்பவரின் உருவம் அதில் காணப்பட்டது. இதை வடிவமைத்தவர் பிரஞ்சு சிற்பியான ஏபெல் லஃப்ளியர்.
இரண்டாம் உலகப்போரின் போது இந்தக் கோப்பையை தன்னிடம் தக்க வைத்திருந்தது போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி. இத்தாலியின் அப்போதைய ஃபிஃபா அதிகாரிகள் இதை ரோம் நகரில் இருந்த வங்கியிலிருந்து ஒரு பெரிய பெட்டியில் வைத்து வேறு இடத்துக்குக் கொண்டு வந்தனர். நாஜிகள் கைகளில் அகப்பட்டுக் கொண்டு விடக்கூடாது என்பதுதான் காரணம்.
1966ல் இங்கிலாந்தில் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னால் அந்தக் கோப்பையை வெஸ்ட்மினிஸ்டர் மத்திய அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள். அது எப்படியோ திருடப்பட்டு விட்டது. அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்டு தெற்கு லண்டனில் உள்ள ஒரு தோட்டத்தில் அது காணப்பட்டது!
அதற்கு பிறகு 1974ல் தற்போதைய புதிய கோப்பை உருவானது.
1994 உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு இந்த கோப்பையின் அடியில் ஒரு படலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பகுதியில் இந்தக் கோப்பையை வென்ற அணிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டன.
கோப்பையை வென்ற அணிகள் அதை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதை பாதுகாப்பாக திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். மாறாக இதேபோன்று தங்கப் பூச்சு அடிக்கப்பட்ட வெண்கலக் கோப்பை ஒன்று அந்த அணிக்கு வழங்கப்படும்.
*******************