LSG vs GT: முதன்முறையாக குஜராத் அணியை வென்ற லக்னோ அணி !

LSG vs GT
LSG vs GT

IPL தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் சேர்க்கப்பட்டதிலிருந்து நேற்றைய ஆட்டத்தில்தான் முதல் முறையாக குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி வென்றது.

லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். லக்னோ அணியிலிருந்து களமிறங்கிய டி காக் ஒரே சிக்ஸ் மட்டும் அடித்து 6 ரன்களுடன் வெளியேறினார். அதேபோல் படிக்கல்லும் 7 ரன்களே அடித்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்து விளையாடிய கே.எல்.ராகுல் 33 ரன்களும்,  மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி 58 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இதனால்தான் கொஞ்சமாவது அணிக்கு ரன்கள் சேர்ந்தது. அணியில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் தலா 20 ரன்களுக்கு மேல் அடித்ததால் லக்னோ 163 ரன்களைக் குவித்தது. லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறியதற்கு காரணம் ஆடுகளம் தொய்வாக இருந்ததுதான். பேட்டுக்கு பந்து செல்வதே கடினமாக இருந்ததால் ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது.

இதே தடுமாற்றம்தான் குஜராத் அணிக்கும் ஏற்பட்டது. குஜராத் அணியில் ஒப்பனராகக் களமிறங்கிய சாய் சுதர்சன் 31 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 21 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவாக ரன்களை சேர்க்காததால் அணி சரிவை நோக்கிச் சென்றது. ராகுல் திவாட்டியா தனி ஆளாக அணியை வெற்றிபெற வைக்கப் போராடினார். இருப்பினும், எதிரே களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் வந்தவுடன் அவுட்டாகித் திரும்பினார்கள். இதனால் 18.5 ஓவர்களிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. குஜராத் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது.

இதையும் படியுங்கள்:
டி20 உலககோப்பை: இந்திய வீரர்களை அறிவிக்கும் தேதி வெளியீடு!
LSG vs GT

லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பவுலர்களே. ஏனெனில், யாஷ் தாக்கூர் மிகச் சிறப்பாக பந்துவீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாகச் செயல்பட்டார். அதேபோல் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் நான்கு ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். குர்னல் பாண்டியாவும் நான்கு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் எடுத்தார்.

இதனால் இதுவரை குஜராத்தை எதிர்த்து வெற்றியைக் காணாத லக்னோ அணி முதன்முறையாக வெற்றிபெற்றது. அதேபோல் நேற்று மதியம் நடந்தப் போட்டியில் இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக மும்பை அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com