மகேந்திர கிங் தோனி - அன்றும் இன்றும் என்றும்.

மகேந்திர கிங் தோனி - அன்றும் இன்றும் என்றும்.

Sankalp Harikrishnan
Sankalp Harikrishnan

மொழியாக்கம்; கிரி கணபதி

'Age is Just a Number'. இந்த வரியானது கடந்த சில ஆண்டுகளாக அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது என்பது என் கருத்து. குறிப்பாக விளையாட்டுத் துறையில், தலைசிறந்த வீரர்களைக் கூட வயதானது எளிதாக பாதித்து விடுகிறது. இந்த முரண்பாடுகளை மீறி இந்த வரியின் உண்மையான அர்த்தத்தை நிலை நிறுத்தும் வீரர்களை நாம் அரிதாகவே காண்கிறோம். கிரிக்கெட்டில் சிறந்த சச்சின் டெண்டுல்கர் கூட வயதை மீறும் முயற்சியில் தோல்வியடைந்தார். ஆனால், நம்ம தல MS.தோனி தனது 41வது வயதிலும் உலக அளவில் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரையும் திகைக்க வைத்து வியப்பில் ஆழ்த்தி வருகிறார் என்று உறுதியாக சொல்லலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 200 போட்டிகளை முடித்தவர். அந்த Franchise-ன் மீது நாம் காதல் வயப்படுவதற்கு முக்கிய காரணமே இவர் தான். இந்த விவேகமான ஆளுமையின் சிறப்புக்கு காரணங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது. அப்படி சிந்தித்ததில், இந்த கேள்விக்கு ஒரே ஒரு பதில் மட்டும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில், தோனிதான் எப்போதுமே சிஎஸ்கே அணியையும், பொதுவாக சென்னையையும் விரும்புவதையே காட்டுகிறார். கிரிக்கெட் விளையாட்டு, இதுவரை MS. தோனியைப் போன்ற Cool-ஆன ஆட்டக்காரரைக் கண்டதில்லை. முன் நின்று அணியை வழி நடத்துவதற்கும், அணியின் மீது தனது கட்டுப்பாட்டை செலுத்துவதற்குமான சமநிலையை கண்டறிந்து, அவருடன் விளையாடுபவர்கள் தங்கள் திறமைகளையும்  விளையாட்டுத் திறனையும் சுதந்திரமாக வெளிப்படுத்தும் வகையில் செயல் படுகிறார். கிரிக்கெட் வீரர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அவர் ஒருபோதும், பின்பற்றவில்லை. ராஞ்சியில் தொடக்க நாட்களிலிருந்தே, தோனி கிரிக்கெட் விளையாட்டில் ஒரு விசித்திரமான பாணியைக் கொண்டிருந்தார். பயிற்சியாளரின் விளையாட்டு முறைகளிலிருந்து விலகி தனது வெற்றிக்கான பாதையை அவரே செதுக்கினார். எப்போதும் சில தனித்துவமான கொள்கைகள் மீது அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவருடைய கொள்கைகளை சென்னை எப்போதும் நம்பும். இதையும் பலப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்.

  1. அடிப்படைகளை சரியாக செய்யுங்கள் மற்றும் கட்டுப்படுத்தக்கூடியவற்றை கட்டுப்படுத்துங்கள் - CSK அவர்களின் அதிரடி பேட்டிங்கினாலோ அல்லது அசத்தலான பவுலிங்கினாலோ ஒருபோதும் அறியப் படவில்லை. அவர்களிடம் இருப்பதை வைத்து கடினமாக உழைத்தார்கள். 

  2. முடிவைக் காட்டிலும் செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள்- தோனி ஒருபோதும் தோல்விகளைப் பற்றி கவலைப்பட்டதில்லை. அணியின் செயல் முறையை சார்ந்து, ஒரு பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட்டினார்கள். 

  3. ஒருவரின் அடிப்படையான திறமையை வளர்த்து படிப்படியாக அவர்களின் வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் - சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ருத்ராஜ் என அவரது வழிகாட்டுதலின் கீழ் வளர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் முடிவற்றது.

  4. விசுவாசம், அனுபவம் நிலைத்தன்மை- அவர் அணியை வழிநடத்த தொடங்கியதிலிருந்தே CSK-ல் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் உறுதியான அடித்தளத்தை தோனி உருவாக்கினார். இந்த பணியாளர்களிடம் ஒரு குறிப்பிட்ட விசுவாசமும் நம்பிக்கையும் உள்ளது. அது காலப்போக்கில் சிதைந்து போகவில்லை.  நான்கு IPL பட்டங்கள், பேட் செய்வதற்கு No.7 or No.8  இடத்தில் இறங்கி 5000+ ரன்கள், நிர்வாகம் மற்றும் அணித்தேர்வில் நிலைத்தன்மை என அனைத்துமே தோனியின் எளிமையான தலைமையில் ஒளிந்திருக்கும் உறுதித்தன்மையை பிரதிபலிக்கிறது. 

மகேந்திர சிங் தோனி மிகவும் திறமையான ஆட்டக்காரராக பிரபலமடையவில்லை என்றாலும், ’விசில் போடு ஆர்மி’யால் மிக ஆழமாக நேசிக்கப்படுகிறார்.  இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? சில CSK  விசிறிகளிடம் கேட்டோம்.

Ajith, வயது 48.( தோனியின் தீவிர ரசிகர் ஆரம்பகாலம் முதலே) : தல கிரீஸில் இருக்கும் போது நீங்கள் உணரும் அட்ரினாலின் ரஷ் ஈடு இணையற்றது. அவர் மைதானத்தில் காலடி எடுத்து வைக்கும் தருணம் ஒவ்வொரு இந்தியனையும் பைத்தியம் பிடிக்க வைக்கும். அவருடைய அமைதியைச் சுற்றி ஒரு பிரகாசமும் கவர்ச்சியும் உள்ளது. அவர் 'புயலுக்கு முன் அமைதி' என்பதை வெளிப்படுத்துகிறார். மேலும் பல விசித்திர வெற்றிகளுடன் CSK மற்றும் இந்தியாவை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தியவர். 2011 உலகக்கோப்பை காகவும், எங்கள் அழகான IPL Franchise-காகவும் அவர் காட்டிய விசுவாசத்திற்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

Skanda,
Skanda,

Skanda, வயது 21. (IPL சீசன் 1-ல் இருந்து பின்தொடர்கிறார்): உரிமையாளருக்கும், சென்னை நகருக்கும், தமிழ் மக்களுக்கும் அவர் காட்டும் விசுவாசம் ஈடு இணையற்றது. இத்துடன் ஐபிஎல் மட்டுமின்றி, சாம்பியன்ஸ் லீக் டி20யிலும் அவர் பல பட்டங்களை வென்றுள்ளார் என்பதும் உண்மை. மஹி, பணிவின் உருவம். அவர் தன்னுடைய பாதுகாவலர்கள் மற்றும் மைதான வேலையாட்களை வாழ்த்துவது, டிரைவருடன் நட்புறவு கொண்டு பழகுவது, சக வீரர்களை மிகுந்த மரியாதையுடனும் வழிகாட்டுதலுடனும் நடத்துவது போன்ற எளிமையான சைகைகளால் தன் தன்னடக்கத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். 

Harshitha, வயது 18. (2010 முதல் CSK ரசிகை): எனது தளபதியின் பிரம்மாண்டமான சிக்சர்களும், பரபரப்பான வெற்றி முடிவுகளும் என்னை அவர் மீது காதல் கொள்ள வைத்தது. அவர் சென்னை அணியை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன். அவர் தனது எல்லா வேலைகளையும் அமைதியாக செய்கிறார். ஆனாலும் அவர் களத்தில் இருக்கும்போது யாரும் கண்ணிமைப்பதில்லை. கேப்டன் கூல்; அவரது அணுகுமுறை அலாதியானது. அவரது வெற்றிகள் அவரைப்பற்றி பேசுகின்றன. தோனி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு உணர்வு. 

நான் உறுதியாக நம்புகிறேன், எனக்கும் மற்றவர் களுக்கும், தோனிதான் எங்கள் கனவுகளை நம்ப வைத்த முன்மாதிரி. நாம் எங்கிருந்து வந்தாலும் நமது செயல் எவ்வளவு வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், ஆர்வம், கடின உழைப்பு மற்றும் நுட்பமான அணுகுமுறை கொண்டு மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதை அவர் நமக்கு கற்றுக்கொடுத்தார்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களை சிறந்தவர்களாக ஆக்குங்கள் அவர்கள் உங்களை சிறந்த நபராக மாற்றுவார்கள் - இதுதான் MSD-ன் தாரக மந்திரம். ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது கடைசி ஆட்டத்தை மற்றொரு விறுவிறுப்பான வெற்றியுடன் பார்க்க விரும்புகிறது. ரவி சாஸ்திரியின் சிறந்த வாசகமான, "Dhoni Finishes off in style, a magnificent strike into the Crowd" என்பது இன்றுவரை நம் இதயங்களில் எதிரொலிக்கும். அதேபோல MS.MSD இன்னொரு கோப்பையுடன் வெளியேற வேண்டும் என்பது நம் அனைவருடைய விருப்பம். சேப்பாக்கமும், CSK குடும்பமும் மற்றும் இந்தியாவின் அனைத்து  Yellove ரசிகர்களும் உங்களை எப்போதும் விரும்புவார்கள், தல! 

logo
Kalki Online
kalkionline.com