அரசியல் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்ட கங்குலி மற்றும் யூசுப் பதான்..!

cricketers in politics
Ganguly Yusuf Pathan and mamta
Updated on

மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்களில் கிரிக்கெட் பிளேயர்களின் தலைகள் உருள தொடங்கியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. மற்ற அனைத்து பிளேயர்களையும் விட கங்குலிக்கு மேற்கு வங்கத்தில் செல்வாக்கு மிக அதிகம்.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ,மம்தா பானர்ஜியை வீழ்த்துவதற்கு கங்குலியை மேற்கு வங்க பாஜக தலைவராக்க , பாஜக பெரிய முயற்சியை எடுத்தது. ஆனால், கங்குலியோ அரசியல் ஆர்வம் ஏதுமின்றி பாஜகவின் கோரிக்கைகளை மறுத்துவிட்டார்.தற்போது மேற்குவங்கத்தின் அரசியல் சூழ்நிலைகள் முற்றிலுமாக மாறிவிட்டது.

அசைக்க முடியாத சக்தியாக மேற்கு வங்கத்தில் இருந்த மம்தா பானர்ஜியின் ஆதிக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அவரது கட்சியில் இருந்த 80% சட்டமன்ற உறுப்பினர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதேநேரம் அந்தக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து விட்டனர்.

கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த பொழுது, அப்போதைய இந்திய அணியில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார். மேலும் இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளனர். முன்னாள் கேப்டன் என்ற முறையில் கங்குலியின் மீது யூசுப் பதான் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். இவர் திருணாமுல் காங்கிரஸில் இணைந்து பஹரம்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

யூசுப் பதானுக்கு முன்னர் ,1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற, கீர்த்தி ஆசாத் என்ற பவுலரும திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அந்த கட்சியின் 28 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் பாஜகவிற்கு ஆதரவளித்து விட்டனர். இந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் யூசுப் பதானும் ஒருவர் என்று மம்தா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாநில அரசியலில் தன்னுடைய இருப்பு முற்றிலும் இல்லாமல் போனதை உணர்ந்த மம்தா பானர்ஜி , பாஜகவை பழி வாங்கவும், தேசிய அரசியலில் நரேந்திர மோடிக்கு எதிரான தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் முயற்சி செய்து வருகிறார். இதற்காக பஹரம்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் யூசுப் பதானை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக யூசுப் பதானிடம் எந்த ஒரு சாதகமான தகவலும் வரவில்லை. அதனால், சவுரவ் கங்குலியின் மூலம் யூசுப்பை ராஜினாமா செய்ய சொல்லி நிர்பந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து யூசுப்பிற்கு மேலும் அழுத்தம் கொடுக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்தும் முயற்சி செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள சௌரவ் கங்குலி " நான் யூசுப் பதானை சமீப காலத்தில் தொடர்பு கொள்ளவே இல்லை , எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டதில்லை. வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் என்னை இரையாக்க வேண்டாம்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயினும் இன்னும் யூசுப் பதானை ராஜினாமா செய்ய வைக்க கீர்த்தி ஆசாத் மூலம் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் மீதான அரசியல் சூழல், தற்போது மேற்குவங்க அரசியல் களத்தை சூடாக்கி வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com