
* மார்க் டெய்லர் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கேப்டனாக திகழ்ந்த துவக்க ஆட்டக்காரர். 1998 ம் வருடம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பெஷாவர் டெஸ்டில் மூன்று சதம் அடித்தார். 334 ரன்கள் எடுத்த பொழுது, அந்த இன்னிங்சிலிருந்து ரிடையர் ஆகி விலகிக் கொண்டார். சர் டான் பிராட்மேன் அடித்த அதிக பட்சமாகிய டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோரான 334 ரன்களை, கடக்க வாய்ப்பு இருந்தும் கடக்க மறுத்து இந்த முடிவை எடுத்தார். மார்க் டெய்லர், சர் டான் பிராட்மேன் மேல் வைத்திருந்த மரியாதையையும், மதிப்பையும் இவ்வாறு வெளிப்படுத்தினார்.
* 1971 ம் வருடம் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவுகளில் இரண்டாவது டெஸ்டில் வென்றது. பிறகு அதே வருடம் இங்கிலாந்து மண்ணில் வென்று சாதனைப் படைத்தது. இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி இலக்கை பவுண்டரிகள் மூலம் முடித்து வைத்தவர், சையத் அபீத் அலி ஆவார்.
* இந்திய கிரிக்கெட் டீமிற்காக இவர் சரியாக பத்து வருடங்கள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியவர். முதல் டெஸ்ட் 31.12.1948 அன்று, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், கடைசி டெஸ்டை 31.12.1958 அன்று, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் விளையாடியவர். இந்த ஆட்டக்காரர் பெயர் குலாம் அஹமது.
* இந்தியாவின் புகழ்பெற்ற நான்கு சுழல் பந்து வீரர்கள் ஆன பிரசன்னா, பேடி, சந்திரசேகர் மற்றும் வெங்கட்ராகவன் ஆகியோர் சேர்ந்து ஆடியது ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் மட்டும் தான்.
* 1967ல் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் புத்தி குந்தேரன் மற்றும் பாரூக் இன்ஜினியர். குந்தேரன் ஓப்பனிங் பவுலராகவும் செயல்பட்டார். இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வென்றது.
* பல வருடங்களுக்கு முன்பு கல்கத்தா நகரத்தில், ஒரு மைதானத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த பக்கமாக வந்த மூக்கு கண்ணாடி அணிந்த, அந்த இடத்திற்கு அறிமுகமில்லாத புதியவர் ஒருவர் நின்று அந்த ஆட்டத்தை கவனித்தார். விளையாடியவர்கள் சரியாக ஆடாததால், அவரே முன் வந்து எப்படி சரிவர விளையாட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அவர் கூறியதைக் கேட்காத சிலர் அவரிடம் , "உங்களுக்கு சரியாக கிரிக்கெட் ஆட தெரியுமா?" என்று வினவினர். வந்தவர் நகர்ந்து செல்லும் பொழுது கூறினார். " நான் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மானாக டெஸ்டுகளில் விளையாடியுள்ளேன் . என் பெயர் பங்கஜ் ராய்!". அதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த நபர்கள் அவரிடம் ஓடி சென்று மன்னிப்பு கேட்டனர்.
பங்கஜ் ராய், வினு மன்காடுடன் சேர்ந்து ஏற்படுத்திய துவக்க விக்கெட்டுக்கான பேட்டிங் ரெகார்ட், பல வருடங்கள் உலக ரெகார்டாக திகழ்ந்தது.
* 11 அக்டோபர் 1943ம் ஆண்டு பிறந்த மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் கீத் பாயிஸ் தனது பிறந்த நாளான 11 அக்டோபர் 1996 அன்றுதான் உயிர் துறந்தார். 21 டெஸ்ட், 8 ஒரு நாள் இன்டர்நேஷனல் போட்டிகளில் விளையாடிய அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
* கிரிக்கெட் டெஸ்டுகளில் ஒரு இன்னிங்சில் முதல் முறையாக 300 ரன்களை குவித்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஆண்டி சாந்தம் என்பவர். 1930ல், மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக நடந்த இன்னிங்சில்தான் இவர் 325 ரன்களை குவித்தார்.
* 5 கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் மற்றும் கவுண்டி கிரிக்கெட் மேட்சுகளில் பங்கு பெற்றவர்கள். சர் ரஞ்சித் விபாஜி ஜடேஜா , டைகர் பட்டோடி, காலின் மில்பர்ண் , ஐயுல்ப் பீட்டர் நுப்பேன் , டேவிட் பியூல்ட்டன். இவர்கள் எல்லோரும் ஒரே ஒரு கண் பார்வையுடன் உயர்நிலை கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடிய வீரர்கள்.