

ஒரு வழியாக ஐபிஎல் 2023 16வது சீசன் போட்டிகள் முடிவை நெருங்கிவிட்ட நிலையில், நேற்றைய இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் டே விதிப்படி இன்று நடைபெற இருக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கிடையே இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி துவங்க இருந்தது. இதையடுத்து திடீரென மாலை 6 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் லேசான மழையாக இருந்ததால் ஓரளவுக்கு ரசிகர்களுக்கும் இன்று போட்டி நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் நேரம் செல்ல செல்ல மழை விட்டபாடில்லை. போட்டி நடுவர்களும் இரவு 11 மணி வரை காத்திருந்தனர். எந்த பலனும் இல்லை. இதனால் இறுதிப்போட்டியானது ரிசர்வ் டே நாளில் நடக்கும் என அறிவித்தனர்.
அதன்படி ரிசர்வ் நாளான இன்று ஓவர்கள் எதுவும் குறைக்காமல் அதே போல் போட்டி நடக்கும் என்பதால் ஒரு பக்கம் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இருந்தாலும், இன்றும் மழை குறுக்கிட்டு ஒருவேளை போட்டி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் எல்லோர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது.
ஏனெனில் இன்று மாலையும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி மழை குறுக்கிட்டாலும், குறைந்த ஓவர்களைக் கொண்டு நடத்தவும் முடிவெடுப்பார்கள். இருந்தாலும், ஒருவேளை போட்டி நடத்தமுடியாமல் போனால் என்ன மாதிரி அமையும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போட்டி நடக்காமல் போனால், இந்த ஐபிஎல்-லில் அதிக புள்ளிகளைப் பெற்ற குஜராத் அணியிடமே கோப்பை ஒப்படைக்கப்படும். அவ்வாறு கோப்பையை குஜராத் அணி பெறும்பட்சத்தில் தொடர்ந்து 2வது முறை குஜராத் வசம் கோப்பை இருக்கும நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.