

உலகில் மில்லியன் கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஃபிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடர் , தற்போது அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரர் எம்பாப்பே செனகல் நாட்டுடன் நடைபெற்ற போட்டியில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் தங்கள் நாட்டு அணியையும் வெற்றி பெற வைத்துள்ளார்.
இந்த தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில், தற்போதைய உலகின் நம்பர் 2 அணியான பிரான்ஸும் , ஆப்பிரிக்க கண்டத்தின் வலிமையான அணியான செனகலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். தற்போதைய உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெறும் அணியாக பிரான்ஸ் நாடு கருதப்படுகிறது. அதேபோல் ஆப்பிரிக்க நாடுகள் சாம்பியன் கோப்பையை பெற்ற செனகல் அணியும் கடுமையான சவால்களை பிரான்சுக்கு கொடுத்தது.
பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதியதால் மைதானம் முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் மிக கடுமையாக போராடி, எதிரணி கோல் அடிக்க விடாமல் கடுமையான தடுப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதனால் கோல் அடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தாலும் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியாமல் போனது. முதல் பாதி ஆட்டநேரம் முடிவில், இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காமல் ஆட்டத்தை சம நிலையில் வைத்திருந்தனர்.
இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தனது வியூகத்தை மாற்றியமைத்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கடுமையாக போராடினாலும் , 66 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே அதிரடியாக கோல் அடித்து தனது அணியை வெற்றி பக்கம் திருப்பினார். இவரைத் தொடர்ந்து 82 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் இளம்வீரர் பிராட்லி பார்க்கோலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2 –0 என்ற வலிமையான நிலைக்கு மாறியது.
கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டின் வெற்றி உறுதியாக இருந்தாலும் , செனகல் அணி இறுதிவரை கடுமையாக போராடியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், செனகல் வீரர் இப்ராஹிம் எம்பாயே ஒரு சிறப்பான கோல் அடித்து தனது அணியினரை உற்சாகப்படுத்தினார். ஆட்டத்தினை சமன் செய்வதற்கு செனக்கல் அணி இன்னொரு கோல் அடிப்பதற்கு கடுமையாக முயற்சி செய்தது.
ஆனால், பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே , பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து ஒரு அசாத்தியமான 'லாங்-ரேன்ஜ்' கோல் அடித்து செனக்கலின் கனவை கலைத்தார். இதனால் பிரான்ஸ் 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் கடுமையாக போராடினாலும் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.
இந்த போட்டியின் வெற்றியை தொடர்ந்து பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே சில சரித்திர சாதனைகளையும் படைத்துள்ளார். இந்த போட்டியில் அடித்த 2 கோல்கள் மூலம் , உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் 14 கோல்கள் அடித்த வீரராக கிலியன் எம்பாப்பே சாதனை செய்துள்ளார். இந்த சாதனைகள் மூலம் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான 12 கோல்களை அடித்த பீலே மற்றும் 13 கோல்கள் அடித்த மெஸ்ஸி ஆகியோர்களின் சாதனையை முறியடித்துள்ளார். தற்போது அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.
கால்பந்து உலக கோப்பை தொடரில் 16 கோல்களை அடித்து ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் முதலிடத்தில் உள்ளார். இதை சமன் செய்ய எம்பாப்பேவிற்கு இன்னும் 2 கோல்கள் தேவைப்படும் நிலையில் அந்த சாதனையை இந்த தொடரில் நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரம் மெஸ்ஸியும் களத்தில் இருக்கிறார்.