அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி போலந்துக்கெதிரான போட்டியின்போது தனது 22வது உலகக் கோப்பையில் பங்கேற்றார். இதனால் 21 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்ற மாரடோனாவை முந்தினார். ஆனால் இன்றளவும் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த லோதர் மத்தாயஸ் என்பவர்தான். இவர் 25 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.
லியோனல் மெஸ்ஸிக்கு சாதனைகள் புதிதல்ல. சுமார் ஒரு வருடத்துக்கு முன் பிரேசில் நாட்டுப் பிரபலமான பீலேவின் சாதனையை இவர் முறியடித்ததும் பெரிதும் பேசப்பட்டது.
ஸ்பெயின் முன்னணித் தொடரான லா லீகா தொடரில் வாலடோலிட் அணிக்கு எதிராக ஆட்டத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் ஒரு கிளப் அணிக்காக அதிக கோல்கள் (644) அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 643 கோல்கள் என்ற சாதனையைப் படைத்திருந்தார் பீலே.
பார்சிலோனா கிளப்புக்கும் மெஸ்ஸிக்கும் இடையே உள்ள தொடர்பு மிக ஆழமானது. இளம் வயதில் மெஸ்ஸிக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருந்தது. இதற்கான சிகிச்சைக்கு மாதத்துக்கு 900 டாலர் தேவைப்பட்டது. அவ்வளவு தொகையை மெஸ்ஸியின் குடும்பத்தால் செலவழிக்க முடியாத நிலை. பல கால்பந்து விளையாட்டு கிளப்புகளை அணுகி அவர்களுக்காக தான் விளையாடுவதாகவும் தனது மருத்துவ செலவை ஊதியமாகக் கொடுத்து உதவும்படியும் கேட்டுக்கொண்டார். பலனில்லை. அப்போதுதான் பார்சிலோனா கிளப் கைகொடுத்தது.
மெஸ்ஸியின் விளையாட்டுச் சரித்திரத்தில் வேறு பல சுவையான பக்கங்களும் உண்டு.
2005ல் சர்வதேச கால்பந்து போட்டியில் முதன்முதலாக கலந்துகொண்டபோது 47 நொடிகளில் நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கால்பந்து கிளப், அர்ஜெண்டினாவின் தேசிய அணி இரண்டுக்கும் விளையாடுகிறார் மெஸ்ஸி. தன்னுடைய சொந்த நாட்டைவிட ஸ்பெயினிடம்தான் மெஸ்ஸி நேர்மையாக இருக்கிறார் என்று அர்ஜென்டினாவின் தேசிய அணி பலமுறை அவர் மீது விமர்சனக் கணையைத் தொடுத்திருக்கிறது.
2013ல் நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பானை ஒருசேர தாக்கியபோது மெர்சி தனது பாதத்தை மெழுகில் பதிவு செய்து அந்த நாட்டுக்கு நன்கொடையாக அளிக்க அது தங்கத்தில் உருமாற்றப்பட்டது. ஏலத்தில் இந்த தங்கக்கால் 52 லட்சம் டாலருக்கு எடுக்கப்பட்டது.
கோல் அடித்தவுடன் இரண்டு ஆள்காட்டி விரல்களையும் மேல்நோக்கி காட்டுவது இவர் வழக்கம். இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதை இப்படி வெளிப்படுத்துகிறார். தனது அணி தோல்வி அடையும் போதெல்லாம் கொஞ்ச நேரமாவது தனிமையில் இருக்க விரும்புவார் மெஸ்ஸி. அப்போது அவருக்கு யாரிடமும் பேச பிடிக்காது. தான் விளையாடிய கால்பந்துப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதை மெஸ்ஸி மிகவும் வெறுக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்
தென் கொரிய அணியை 4-1 கோல் கணக்கில் வெற்றி கண்ட பிரேசில் அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கால் இறுதிச் சுற்றைச் சேர்ந்த மற்றொரு அணி மொராக்கோ. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை அது வீழ்த்தியது. கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன்முறையாக காலிறுதிச் சுற்றினை எட்டியிருக்கிறது மொராக்கோ.
*******************