உலக அளவில் குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை ஜெர்மனியின் கொலோனில், ஜெர்மன் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வராஜ் அழகப்பன், கணேசன் கருப்பையா, மனோஜ் சிங்கராஜா ஆகிய மூன்று பேரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த மூன்று பேருக்குமான போட்டி நுழைவுக் கட்டணம், விமானச் செலவு, உள்ளூர் போக்குவரத்துச் செலவு, விசா செலவுகள் மற்றும் சீருடை செலவு என ஒவ்வொருவருக்கும் தலா 2, 49,200 ரூபாய் என மூன்று பேருக்கும் சேர்த்து 7,47,600 ரூபாய்க்கான காசோலையை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வழங்கி இருக்கிறார்.
இது தவிர, புது தில்லில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்ற இரண்டாவது தேசிய செரிபிரல் பால்சி (Cerebral palsy) சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இம்மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற்ற இரண்டாவது தேசிய செரிப்ரல் பால்சி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட தடகள மற்றும் கால்பந்து வீரர்கள் 17 பேர் அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயல் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.