‘இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாட வேண்டும்’ மிஸ்பா உல் ஹக் விருப்பம்!

‘இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாட வேண்டும்’ மிஸ்பா உல் ஹக் விருப்பம்!
Published on

ந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டி என்றாலே அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. கடந்த சில வருடங்களாக இந்த இரு அணிகளும் ஐசிசி போட்டி தொடர்களைத் தவிர, குறிப்பாக இந்தியாவில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் செய்வதோ, பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வதோ நிகழாமல் உள்ளது. இதனால் இவர்கள் விளையாடும் போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் மட்டுமே நடைபெறுகின்றன. சமீபத்தில் கூட பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் 4 போட்டிகள், இலங்கையில் 9 போட்டிகள் நடைபெறும்; இதில் இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும்; அதேபோல் பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் ஒரே ஓரு போட்டியில் மட்டுமே விளையாடும் என தீர்மானிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ‘முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா’ என்ற கேள்வி தற்போது உலக அளவில் எழுந்துள்ளது. ஆனால், அதற்குள் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு பாகிஸ்தான் அரசை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுபற்றி ஆராய்ந்து முடிவெடுக்க பாகிஸ்தான் அரசு சிறப்புக் குழு ஒன்றை நியமித்து இருக்கிறது. அந்த குழுவும் இன்னும் தனது தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளுமா என்ற கேள்வி தொடர்கிறது.

இந்தச் சூழலில், அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைக் கூறி இருக்கிறார். பொதுவாக, உலகக்கோப்பை விளையாட்டு போட்டியை தனது நாட்டு வீரர்கள் விளையாடுவதை மக்கள் பார்த்து மகிழ்வார்கள். ஒருவேளை பாகிஸ்தான் அணி விளையாடாமல் போனால், மக்கள் பார்க்கும் வாய்ப்பு பறிக்கப்படும் எனவும் அவர் தனது ஏக்கத்தைப் பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்தியா - பாகிஸ்தான் இடையே மற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, கிரிக்கெட்டில் மட்டும் ஏன் அரசியல் காரணங்களை இணைக்க வேண்டும்? தங்கள் அணிகள் விளையாடுவதைப் பார்க்கும் வாய்ப்பை இரு நாட்டு ரசிகர்களும் இழப்பது நியாயமற்றது. இது இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏமாற்றமளிக்கும் எனவும் அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்து உள்ளார்.

மேலும் அவர், ‘இந்தியாவில் பலமுறை தான் விளையாடியபோது, அங்குள்ள ரசிகர்களின் ஆதரவை அனுபவித்ததாகவும், அது பாகிஸ்தான் வீரர்களுக்கு உத்வேகத்தை, மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் கூறிய அவர், இந்திய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியால் சிறப்பாகச் செயல்பட முடியும். அந்தத் திறன் எங்கள் அணிக்கு உள்ளது’ என்று மிஸ்பா உல் ஹக் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com