

இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒரு முன் மாதிரியாகவும் , இந்தியாவில் மகளிருக்கு கிரிக்கெட் அணி ஒன்று உள்ளது என்று உலகிற்கு தெரியப்படுத்தியவர் மிதாலி ராஜ். மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முதல் பெண் ஜாம்பவானாக இவர் பார்க்கப்படுகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலான தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவிற்காக 12 டெஸ்ட் போட்டிகள் , 232 ஒருநாள் போட்டிகள் , 89 டி 20 போட்டிகளில் விளையாடி 10,000 மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
தற்போது ஐசிசி டி 20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிமுக விழா ஏற்கனவே ஜெய் ஷா தலைமையில் நடைபெற்று விட்டது. இந்திய கிரிக்கெட் அணி எந்த அளவிற்கு வியக்கத்தக்க அளவில் முன்னேறி உள்ளது என்பதையும் , தனது கிரிக்கெட் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
90 களில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை. அதைவிட மகளிர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. தான் கிரிக்கெட் பேட்டை பையில் வைத்து எடுத்து செல்லும் பொழுது , பலரும் நான் ஹாக்கி விளையாடுவதற்கு செல்வதாகவே நினைத்துக் கொண்டிருந்ததாக மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
தான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது இப்படி ஒரு விளையாட்டை பெண்கள் விளையாடுகிறார்கள் என்று பலரும் அறிந்திருக்கவில்லை. ஒரு சிலர் என்னை பார்த்து நீ ஹாக்கி விளையாடுகிறாயா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நான் கிரிக்கெட் வீராங்கனை என்று அவர்கள் கற்பனை கூட செய்ததில்லை. பொது இடங்களில் பெண்கள் கிரிக்கெட் விளையாடினால் கூட அது ஆண்களுக்கான விளையாட்டு, என்ற கருத்து அப்பொழுது சமூகத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
பெண்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடுவதை மக்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. அதன் காரணமாக பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்ற சிந்தனை ஒரு காலகட்டத்தில் இருந்துள்ளது. தங்கள் காலத்து வீராங்கனைகளை விட தற்போதைய கிரிக்கெட் வீராங்கனைகள் மிகவும் வலுவான ஆதரவுகளை பெற்றுள்ளனர். 2007 ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் பிசிசிஐ-யின் கீழ் வருவதற்கு முன்னர் நாங்கள் அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகளுக்காக போராடியிருக்கிறோம். அதுவரை நாங்கள் பிழைப்பிற்காக கிரிக்கெட்டில் இருந்தோம் என்று கூறியுள்ளார்.
அப்போது வீராங்கனைகள் தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக் கொண்டு , கடுமையாக உழைக்க வேண்டிய இருந்தது. அதில் எங்கள் இருப்பை காட்டிக் கொள்ள பாடுபட வேண்டி இருந்தது. பல சமயங்களில் விடாமுயற்சி திறமை ஆகியவற்றின் மூலம் தான் மக்களின் கவனத்தை எங்கள் மீது திருப்ப முடிந்தது.
தனது கிரிக்கெட் உலக வாழ்க்கையின் கஷ்டங்களை பகிர்ந்து கொண்ட முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் , தற்போதைய இந்திய மகளிர் அணிக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.
" கடந்த ஆண்டு ஒரு நாள் மகளிர் உலக கோப்பையை ஹர்மன்பிரீத் கவுரின் தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.
டி20 உலக கோப்பைகளில் வெற்றியை தீர்மானிப்பதில் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறனே முக்கியமாக இருக்கும். மகளிர் அணி சூழலுக்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் "என்று அறிவுறுத்தியுள்ளார்.
மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதும் , கற்றுக்கொள்ளும் ஆர்வம் , திறந்த மனதுடன் இருத்தல் , புதிய அனுபவங்களை பெறுதல் ஆகியவற்றை தங்களது பயிற்சியில் சேர்த்துக் கொள்வது அவசியம். புதிய விஷயங்களை ஏற்ப உங்களை தகவல் வைத்துக் கொள்ளுங்கள் என்பதை அவரது அறிவுரையாக இருக்கிறது.