
ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற உள்ள இந்தப் போட்டியை உலகத் தரம் வாய்ந்த மைதானத்தில் தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இந்தப் போட்டிகளில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய ஆறு நாட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற இருக்கும் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்தில் அமைந்த புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை-2023 போட்டியினை சிறப்பான முறையில் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் போட்டியினை நடத்துவதற்காக 12 கோடி ரூபாய் நிதியினை 6ம் தேதி ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும், சர்வதேச அளவிலான இந்தப் போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பாரிஸ் ஒலிம்பிக் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயிற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்புப் பணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தனர்கள் அமர்வதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பேரன் இன்பநிதி, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, விளையாட்டுத்துறை செயலர், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.