

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரருமான மோகித் ஷர்மா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அவரது தனது 37-வது வயதில் 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
மோகித் ஷர்மா, இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த இரு அணிகளுக்காக 120 போட்டிகளில் விளையாடியுள்ள மோகித் ஷர்மா 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது எகானமி ரேட் 8.77 ஆகும்.
மோகித் ஷர்மா 2011-ல் குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஹரியானா அணிக்காக அறிமுகமானார். 2013-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வலம் வந்தார்.
ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மோகித் ஷர்மா, இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். ஹரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம். தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.
மேலும், பிசிசிஐ, ஐபிஎல் அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களுக்கும் நன்றி கூறிய மோகித் ஷர்மா, தனது மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘எனது கோபங்களையும், மனநிலை மாற்றங்களையும் சகித்துக்கொண்டு, எல்லாவற்றிலும் எனக்குத் துணையாக நின்ற என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆட்டம் முடிந்தது, நன்றிகள் என்றும் தொடரும்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மோகித் ஷர்மாவின் ஓய்வு குறித்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.