தொடர் முயற்சி தான் ஒருவனை வெற்றியாளனாக உயர்த்தும். அவ்வகையில் இன்று கால்பந்து விளையாட்டின் உச்சபட்ச வீரராகத் திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் முயற்சியின் பாதையில் தான் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். யூரோ கோப்பைத் தொடரில் முயற்சியை கைவிட மாட்டேன் என ரொனால்டோ கூறியிருப்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
கால்பந்து உலகில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது இவர் போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக யூரோ கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார். கால்பந்து ரசிகர்கள் ரொனால்டோவுடன், லியோனல் மெஸ்ஸியை ஒப்பிட்டு பேசுவது வழக்கம். இவர்கள் இருவரும் சமகாலத்தில் விளையாடும் மிகச் சிறந்த கால்பந்து வீரர்கள். யூரோ கோப்பைத் தொடரில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான “ரவுண்ட் ஆஃப் 16” நாக் அவுட் போட்டியில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியின் போது ஒரு பெனால்டி ஷூட் அவுட்டைத் தவறவிட்ட ரொனால்டோ களத்திலேயே கண்ணீர் விட்டு அழுத காட்சி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அப்போது சக அணி வீரர்கள் அவரைத் தேற்றிய காட்சிகள் மனதை வருடியது. அதே நேரம் ஸ்லோவேனியா அடித்த கோலை போர்ச்சுக்கல் கோல் கீப்பர் தடுத்து ரொனால்டோவுக்கு சற்று ஆறுதல் அளித்தார்.
கால்பந்து விளையாட்டில் ரொனால்டோ பெயரைக் கேட்டாலே எதிரணிகள் பயம் கொள்ளும் அளவிற்கு இவரது சாதனைகள் உள்ளன. அப்படி இருக்கையில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுக்கல் அணி வெற்றிக்காக ரொனால்டோவையே முழுவதுமாக நம்பி இருந்தது. ஆனால், கோல் போடும் வாய்ப்பை இழந்த ரொனால்டோ மிகவும் மனமுடைந்தார். அதன்பிறகு, போட்டியின் பரபரப்பான கடைசி கட்டத்தில் தனது அனுபவங்களை ஒன்று திரட்டி பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் போட்டு அசத்தினார் ரொனால்டோ.
“எந்த ஒரு வலிமையான வீரனுக்கும் கடினமான காலம் வரும். எனக்கும் அப்படித் தான் இதுபோன்ற கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் நான் இரண்டு பெனால்டி ஷூட் அவுட்டை கோலாக மாற்ற முடியாமல் தவற விட்டுள்ளேன். இது எனது கால்பந்து வாழ்வில் மிகவும் கடினமான நேரம். வெற்றிக்காக அணி என்னை முழுமையாக நம்பியிருக்கும் போது, என்னால் அதைச் செய்ய முடியாமல் போகும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் அடுத்து கிடைத்த பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை கோலாக மாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்றும் எனது முயற்சியை நான் கைவிட மாட்டேன். எந்த ஒரு பெரிய வீரருக்கும் வெற்றியும் தோல்வியும் சமம் தான். எனது தோல்வியில் இருந்து மீண்டு வர என்னுடைய தொடர் முயற்சி தான் காரணம். நான் பிரச்சினைகளை எதிர்கொள்ள என்றும் தயங்கியதில்லை. காலிறுதி சுற்றுக்குள் நுழைய நாங்கள் தகுதியான அணி என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. இதுவே எனது கடைசி யூரோ கோப்பைத் தொடராக கூட இருக்கலாம்” என்று ரொனால்டோ கூறியுள்ளார்.