

கிரிக்கெட் விளையாட்டில் மூன்று வகை ஆட்டங்கள் ஆடப்பட்டு வருகின்றன. அவை டெஸ்ட் மேட்சுக்கள், ஒரு நாள் ஆட்டங்கள், டி 20 கிரிக்கெட். குறிப்பாக டி20 ஆட்டத்தில் முதல் பந்தில் துவங்கும் எதிர் பார்ப்பு பெரும் பாலும் கடைசி பந்து வரையில் தொடரும்.மேட்ச் முழுவதும் விருவிருப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காது.
வேகம், அதிரடி ஆட்டங்கள், பறக்கும் பந்துக்கள், எகிரும் டென்ஷன்கள் என்று களை கட்டி இருக்கும், குறிப்பாக இறுதி ஆட்டம் ( Finals) என்றால் கேட்கவே வேண்டாம்.
ஒரே ஆண்டில் 19 வயதிற்கு உட்பட்டோர், மகளிர், ஆடவர் ஆகிய ஆட்டங்களில் உலக கோப்பைகளை வென்று சாதனை படைத்த பெருமை மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) அணியையே சாரும். 2016-ஆம் ஆண்டில் ஒரு ஒருநாள் உலகக் கோப்பை (U-19) மற்றும் இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்று அவர்கள் அசத்தினர்.
அவற்றை குறித்து முக்கிய தகவல்கள் :
1. ஐசிசி 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கோப்பை (பிப்ரவரி 14, 2016):
வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சர்பராஸ் கான் மட்டும் அதிரடியாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் உலக கோப்பையை வென்றனர். அவர்கள் ஸ்கோர் 146 /5.கேசி கார்ட்டி 52, கீமோ பால் 40 ரன்கள் எடுத்தனர். இந்திய வீரர் மயங் டாகர் 3 விக்கெட்டுக்கள் எடுத்தார்.இது அந்த ஆண்டின் மேற்கிந்தியத் தீவுகளின் முதல் உலகக் கோப்பை வெற்றியாக அமைந்தது.
2. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை (ஏப்ரல் 3, 2016):
ஆடவர் அணியின் இறுதி ஆட்டம் நடை பெறுவதற்கு முன்னதாக மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அணியை வென்று டி20 உலக கோப்பை பட்டதை பெற்று ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர் ஆடவர் அணியின் ரிசல்ட்டை அறிய.இந்த இரண்டு இறுதி ஆட்டங்களும் கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நடைப் பெற்றது.
2016ம் ஆண்டின் ஏப்ரல் 3 ஆம் தேதி சரித்திரம் படைக்கப் பட்டது மேற்கு இந்திய தீவுக்களின் இரண்டு வேறு பட்ட அணிகளால். அவர்கள் மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டனர், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தனர்.எலெய்ஸ் வில்லானி மற்றும் கேப்டன் மேக் லானிங் தலா 52 ரன்கள் எடுத்தனர்.
மேற்கு இந்திய தீவுக்கள் மகளிர் அணி சார்பாக இரண்டு துவக்க வீராங்கனைகள் கிட்ட தட்ட கடைசி வரையில் ஜோடியாக அதிரடி ஆட்டங்களை மேற் கொண்டனர். ஹாய்லே மாதியூஸ் 66,.கேப்டன் எஸ் டைலர் 59 ரன்கள் குவித்தனர். அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
3. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை (ஏப்ரல் 3, 2016):
அதே ஈடன் கார்டான்ஸ் மைதானத்தில் ஆடவர்களுக்கான டி20 இறுதி ஆட்டம் அடுத்து ஆடப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுக்கள் அணிகள் பங்கு பெற்றன.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 54 , ஜாஸ் பட்லர் 36 ரன்கள் எடுத்து அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுக்க உதவினார்கள். ஸ்கோர் 155 / 9.டிவேனே பிராவோ மற்றும் கார்லஸ் ப்ரத்வாயிடே தலா 3 விக்கெட்டுக்கள் கைவசப்படுத்தினர்.மேற்கு இந்திய தீவுக்கள் அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தனர்.
அப்பொழுது களத்தில் இருந்த மார்லோன் சாமுவேல்ஸ் அதிரடி ஆட்டம் வெளிப் படுத்தியும் நம்பிக்கை ஊட்டிய ஆட்டம் ஆடினார்.டிவேனே பிராவோ அவருக்கு துணை நின்று ரன்கள் சேர்த்தார் அணிக்கு.
ஒரு கட்டத்தில் அதிக ரன்கள் சேர்க்க முடியாமல் விக்கெடுக்களை இழக்க துவங்கியது மேற்கு இந்திய தீவுக்கள் அணி. கிறிஸ் கேல்,சிம்மோன்ஸ், அன்றே ரஸ்ஸல், கேப்டன் தறேன் சாம்மி ஆகியோர் குறைந்த ரன்களில் அதிக பந்துக்கள் விளையாடாமல் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பியதால் அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது . 15.3 ஓவரில் ஸ்கோர் 107/6 என்ற நிலையில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
அந்த தருணத்தில் இங்கிலாந்து அணியினர் கை ஓங்கி இருந்தது. அந்த அணி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது களம் இறங்கினார் மேற்கு இந்திய தீவுக்கள் பவுலர் கார்லஸ் ப்ரத்வாயிடே.அவர் எதிர் கொண்ட 10 பந்துக்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தார். ஒரு பவுண்டரி அடித்ததுடன் நிறுத்தாமல் வரிசையாக நான்கு சிக்ஸர்கள் பறக்க விட்டார். இங்கிலாந்து அணி பவுலர் பென் ஸ்டோக்ஸ் வீசிய 2.4 ஓவர்களில் அவர் விட்டு கொடுத்த ரன்கள் மட்டும் 41.
19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் ஆனது. மார்லன் சாமுவேல்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி முக்கிய வீரர்கள் ரன்கள் மார்லன் சாமுவேல்ஸ் 85 ( 66 பந்துக்கள் ) டிவேனே பிராவோ 25 (27 பந்துக்கள் ) கார்லஸ் ப்ரத்வாயிடே 34 (10 பந்துக்கள் ). மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஸ்கோர் 161 / 6. (19.4 ஓவர்களில் ).
இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லே 3, ஜோ ரூட் 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
மகளிர் அணியை தொடர்ந்து அதே நாளில் அதே மைதானத்தில் ஆடவர் அணியும் டி 20 உலக கோப்பை வென்று தனி சரித்திரம் படைத்து அசத்தினர்.ஆக மொத்தம் 2016 ல் மட்டும் மேற்கு இந்திய தீவுக்கள் மூன்று பிரிவு அணிகள் மூன்று கிரிக்கெட் உலக கோப்பைகளை வென்று சாதித்தனர்.இவ்வாறு 2016-ஆம் ஆண்டில் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று வெவ்வேறு உலகக் கோப்பைகளை வென்று கிரிக்கெட் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்தது.