யுஎஸ் ஓபன்: இறுதிச்சுற்றில் ஜோகோவிச்!

Novak Djokovic
Novak Djokovic
Published on

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், பென் ஷெல்டனை 6-3, 6-2, 7-6 (6-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஜோகோவிச் நுழைவது இது 36வது முறையாகும். மேலும் யுஎஸ் ஓபன் போட்டியில் இது அவருக்கு 100வது போட்டியாகும்.

நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் டானீல் மெட்வதேவ் இடையிலான போட்டியில் வெற்றிபெறுபவர்களுடன் ஜோகோவிச் இறுதிச்சுற்றில் மோதுகிறார்.

விம்பிள்டன் 2023 போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சை ஸ்பெயின் வீரரான அல்காரஸ் வெற்றி கண்டார். யுஎஸ் ஓபனில் ஒருவேளை அல்கராஸை ஜோகோவிச் மீண்டும் சந்தித்தால் ஆட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும்.

ஷெல்டனுக்கு எதிரான அரையிறுதியில் தொடக்கம் முதலே ஜோகோவிச்சின் கை ஓங்கியிருந்தது. ஷெல்டன் ஓரளவு தாக்குதல் ஆட்டத்தை நடத்தியபோதிலும், அது ஜோகோவிச்சின் ஆக்ரோஷமான ஆட்டத்தை தடுத்து நிறுத்த போதுமானதாக இல்லை.

முதல் செட் ஆட்டத்தில் ஜோகோவிச் 4 - 2 என முன்னிலை பெற்றிருந்தார். ஷெல்டன் சில பிரேக் பாயிண்டுகளை பெற்றாலும் அவரால் ஜோகோவிச்சை வீழ்த்த முடியவில்லை. இதையடுத்து, 6 - 3 என முதல் செட்டை ஜோகோவிச் வென்றார். இரண்டாவது செட்டிலும் இதேநிலை நீடித்தது. மூன்றாவது செட்டில் ஆட்டம் கடுமையாக இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் 4க்கு 4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். ஆனாலும், ஜோகோவிச் ஆட்டத்தை தன்கையில் எடுத்துக்கொண்டு 6 - 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா (இந்தியா) மற்றும் மாத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி ராஜீவ் ராம் மற்றும் ஜோ ஸாலிஸ்பரி ஜோடியிடம் 6 - 2, 3 - 6, 3 - 6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. போபண்ணா, மாத்யூ ஜோடி முதல் செட்டில் 6 - 2 என வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு செட்களில் அமெரிக்க வீரர்களான ராஜீவ் ராம் மற்றும் ஸாலிஸ்பரி ஜோடியிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, போபண்ணா, எப்டென் ஜோடி ரன்னர் இடத்தை கைப்பற்றினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com