இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி!

ODI IND vs NZ
ODI IND vs NZImg Credit: Cricket Addictor
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 2வது ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டது. நேற்று அக்டோபர் 27 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா ஜோடி ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கினர். 15 ஓவர்கள் இந்த ஜோடி நிலைத்து நின்று 87 ரன்கள் எடுத்து இந்திய அணியின் பவுலர்களை மிகவும் சோதித்தனர். அதன் பிறகு முதலில் ஜார்ஜியா ப்ளிம்மர் (41) தீப்தி ஷர்மா பந்து வீச்சில் ராதா யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த லாரன் டவுன் பந்துகளை வீணாக்கி கொண்டிருந்தார். அவரும் வெளியேற சோபி டிவைன் களமிறங்கினார்.

சோபி நாலு புறமும் இந்திய பவுலர்களின் பந்துகளை சிதற விட்டுக் கொண்டிருந்தார். ஏழு பவுண்டரிகள், ஒரு 6 உள்பட 79 ரன்களை குவித்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய சுசி பேட்ஸ் 58 ரன்களுடன் ராதா யாதவ் பந்தில் வெளியேறினார். மேடி கிரீன், சோபியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக 42 ரன்கள் எடுத்தார். இந்த இருவரையும் ராதா யாதவ் வெளியேற்றினார். அதன் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 259/9 என்ற வலிமையான ஸ்கோரை எட்டியது. இந்திய அணியின் சார்பில் ராதா யாதவ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை துரத்திய இந்தியா மகளிர் அணியில் ஷாபாலி வர்மா, ஸ்மிருதி மாந்தனா ஜோடி களமிறங்கியது. அவருக்கு என்ன வருத்தமோ? தெரியவில்லை, வழக்கம் போல நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி ரன் எதும் எடுக்காமல் அவுட்டானார். ஷாபாலி வர்மா (11), யாஸ்திகா (12) என அடுத்தடுத்து வெளியேற முதல் 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து தத்தளித்தது இந்திய அணி. கேப்டன் ஹார்மன் பிரித்சிங் மட்டும் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

26 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களுக்கு இந்திய அணி சரிந்தது. அப்போது ராதா யாதவ் பொறுப்புடன் விளையாடி 48 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். மறுபுறம் சைமா தாகூர் (29) ஒன்பதாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்து சிறிது நம்பிக்கை கொடுத்தார். ஆயினும் இந்த கூட்டணி உடைய 183 ரன்களில் இந்திய அணியை மொத்தமாக சுருட்டியது நியூசிலாந்து. நியூசிலாந்து சார்பில் சோபி டிவின், லியா தலா 3 விக்கட்டுகளை அள்ளி அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளனர். இதனால் இறுதி போட்டியில் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்திய ஆடவர் அணி நியுசிலாந்திடம் தோல்வியை தழுவி உள்ளதால் , இந்திய மகளிர் அணியும் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com