அதிகமாகப் பேசும் முதியவர்கள். அதுவும் நல்லது தான்! 

Old people who talk too much.
Old people who talk too much.

பொதுவாகவே வயதில் முதியவர்கள் அதிகம் பேசுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் ஏன் அப்படி பேசுகிறார்கள்? அவர்கள் அப்படி பேசுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் அதிகப்படியான வாழ்க்கை அனுபவங்கள் தான். உதாரணத்திற்கு உங்களுடைய கல்லூரி வாழ்க்கையைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னவெல்லாம் சொல்வீர்கள்? முதலாம் ஆண்டு தொடக்க நாள் முதல், இறுதி ஆண்டு கடைசி நாள் வரை நம்மிடம் சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும் அல்லவா? ஒரு மூன்று ஆண்டுகள் கல்லூரி அனுபவத்தையே நம்மால் பல மணி நேரம் பேச முடியும்போது, கிட்டத்தட்ட 60, 70 ஆண்டுகால வாழ்க்கை அனுபவத்தைக் கொண்ட மூத்த குடிமக்களால் எவ்வளவு பேச முடியும் என சிந்தித்துப் பாருங்கள். 

முதுமைப் பருவத்தில் இவர்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைப்பதாலும் அதிக நேரம் பேசுகிறார்கள். பணி ஓய்வுக்குப் பிறகு பல முதியவர்கள் தங்களின் வேலை நாட்களில் இருந்ததைவிட அதிக ஓய்வு நேரத்தில் இருக்கிறார்கள். இத்தகைய அதிக நேரம் சொந்த பந்தங்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டாருடன் அதிகம் உரையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் முதுமை காலத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மரணம் அல்லது உடலின் இயலாமை காரணங்களால், அவர்களின் சமூக வட்டம் குறைந்து போகிறது. இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள மற்றவர்களிடம் அதிகமாக பேசுவதற்கும் ஈடுபாட்டைக் காட்டுகின்றனர்.

இவர்கள் இப்படி அதிகமாக பேசுவதும் நல்லது தான் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் முதுமை காலத்தில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனை Alzheimer எனப்படும் ஞாபக மறதி நோய். அதிகமாக பேசும் முதியோர்களுக்கு அவ்வளவு எளிதாக ஞாபக மறதி வருவதில்லையாம். 

அதிகமாக பேசுவதால் ஏற்படும் நன்மைகள் என்று பார்க்கும்போது, 

முதலாவதாக, ஒருவர் அதிகம் பேசுவதால் அவரின் மூளை செயல்திறன் அதிகமாக இருக்கும். ஏனென்றால், ஒருவரிடம் பேசும்போது நாம் எப்படி பேச வேண்டும், எத்தகைய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் மூளை சிந்தித்துக்கொண்டே இருக்கும். குறிப்பாக வேகமாக பேசும்போது எதிரே இருக்கும் நபர் கேட்கும் கேள்விக்கான பதிலை உடனடியாக கூறுவதற்காக முயற்சி செய்வதால், அது மூளையின் செயல திறனை அதிகரித்து மறதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.  

இரண்டாவது, ஒருவரிடம் பேசினாலே மன அழுத்தம் வெகுவாகக் குறையும். இதன் காரணமாகவே மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள் எனக் கூறுகின்றனர். மனதில் ஏதாவது பாரமாக அழுத்திக்கொண்டிருந்தால், அதை பிறரிடம் சொல்லும்போது நிம்மதியான உணர்வை ஏற்படுத்தும். 

இறுதியாக, அதிகமாக பேசுவதென்பது நமது முகத்தசைக்கும், தொண்டைக்கும், நுரையீரலுக்கும் ஒரே சமயத்தில் பயிற்சி கொடுப்பது போலாகும். எனவே வயதில் முதியவர்கள் அதிகமாகப் பேசினால், அவர்களுக்குப் பல நன்மைகள் உள்ளது. எனவே ஏதாவது முதியவர் உங்களிடம் பேச முற்பட்டால், அவர்களிடமிருந்து விலகிச் செல்லாமல், அவர்கள் சொல்வதை சற்று காது கொடுத்துக் கேளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com