காதலன் கொடுத்த முத்தத்தால் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை
டோக்கியோவில் 2020 கோடைகால ஒலிம்பிக்கில் டீம் ஃபாயிலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை யசோரா திபஸ், 2024-ம் ஆண்டு ஜனவரியில் தடைசெய்யப்பட்ட தசையை வளர்க்கும் பொருளான ‘ஆஸ்டரின்’ உட்கொண்டதாக சோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் ஊக்கமருந்து தடை விதிக்கப்பட்டது.
அவரது காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன் முத்தமிட்டபோது எச்சில் மூலம் ‘ஆஸ்டரின்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து அவரது உடலுக்குள் புகுந்து புத்துணர்ச்சி கொடுத்ததாக உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றம் சாட்டியது. ஆனால் முத்தத்தின் மூலம் மட்டுமே யசோரா திபசின் உமிழ்நீரில் ஆஸ்டரின் இருந்துள்ளதே தவிர, அவர் தானாக ‘ஆஸ்டரின்’ எடுத்துக்கொள்ளவில்லை என்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்டதையடுத்து, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) தடைநீக்கத்தை தள்ளுபடி செய்தது.
இதனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் அவரால் பங்கேற்க முடிந்தது. அங்கு அவர் வாள்வீச்சு போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இதை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘முத்தமிடும் போது எச்சில் வழியாக ஊக்கமருந்தின் தாக்கம் அடுத்தவருக்கு செல்லும் என்பது உண்மை தான். ஆனால் முத்தமிடும் போது தனது காதலர் ஊக்கமருந்தை உட்கொண்டு இருந்தார் என்பது யசோரா திபசுக்கு தெரியாது. திபஸின் பரிசோதனையில் ஆஸ்டரின் இருப்பது "வேண்டுமென்றே எடுக்கவில்லை" என்றும், மேலும் அவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறி குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்தது மட்டுமின்றி நான்கு ஆண்டு தடை நீக்கம் கோரி வந்த உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் (WADA) மேல்முறையீட்டை CAS தள்ளுபடி செய்தது.
திபஸின் காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன், ஊக்க மருந்து பரிசோதனையின் போது அவர் ஆஸ்டரின் எடுத்துக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திபஸ் சமூக ஊடக வலைதளத்தில் தனது தனித்துவமான ஒலிம்பிக் பயணத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்தாண்டு நான் அபரிமிதமான தைரியத்தையும் அசைக்க முடியாத விடாமுயற்சியையும் காட்டியுள்ளேன் என்றும், அநீதி, மனக்காயத்திற்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது’ என்றும் பதிவிட்டுள்ளார்.