பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஆட்டநாயகன் விராட் கோலி

இன்று மெல்போர்னில் நடைபெற்ற டி20 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பூர்வாங்க சுற்றில் இந்தியா பாகிஸ்தானை அபாரமாக வெற்றிபெற்றது.

இந்தியா டாஸ் வென்று பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தது. முதல் இரு விக்கெட்டுகளை மளமளவென்று ஹர்ஷ்தீப் சிங் சாய்த்தார். பின்னர் இஃப்திகார் அகமதும் ஷான் மசூதும் இணைந்து ஆடி பாகிஸ்தானை இக்கட்டிலிருந்து மீட்டார்கள். இறுதியாக எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது பாகிஸ்தான்.

160 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி ரோகித் மற்றும் ராகுல் இருவரையும் சடுதியில் இழந்தது. விராட் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் நிதானமாக ரன்களைச் சேர்த்து எட்டாக் கனியாக இருந்த வெற்றியை அருகில் கொண்டு வந்தார்கள். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்த போதும், மெதுவாக ஆடிய போதும், விராட் கோலி சிக்ஸர்களாக குவித்து தன்னுடைய முழு திறமையைக் காட்டினார்.

ரஃப் வீசிய பத்தொன்பதாம் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை சிக்ஸர்ளை விளாசிய கோலி பாகிஸ்தானின் வெற்றிக் கனவை தகர்த்தார். வெற்றிக்கு மிக அருகில் வந்த போது ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் ஸ்பின்னர் நவாஸ் இடுப்புக்கு மேலே வீச அதையும் கோலி சிக்ஸருக்கு அனுப்பினார். இடுப்புக்கு மேலே வீசப்பட்டதால் அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டது.

அடுத்த பந்து நேரே விக்கெட்டை வீழ்த்து தேர்ட்மேன் திசைக்கு ஓடியது. விக்கெட் வீழ்ந்தாலும் அது “ஃப்ரீ ஹிட்” என்ற வகையறாவைச் சேர்ந்ததால் கோலியும் பாண்ட்யாவுக்குப் பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் மூன்று ரன்கள் ஓடி இந்தியாவை சௌகரியமான நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

இரண்டு பந்துகள் இரண்டு ரன்கள் என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் கிரீஸை விட்டு வெளியே வந்து ஆடி தனது விக்கெட்டை இழந்தார். ஒரு பந்து இரண்டு ரன்கள் என்றது ஸ்கோர்கார்டு. ரவிச்சந்திரன் அஷ்வின் கால் பக்கம் சென்ற பந்தை தொடாமல் விட்டதால் அது வைட் ஆகியது. அடுத்த பந்தில் வெற்றிக்கான ரன்னை அஷ்வின் அடித்தார்.

53 பந்துகளில் 82 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்:

பாகிஸ்தான் 159/8. - ஷான் மசூது - 52 (ஆட்டமிழக்காமல்), இஃப்திகார் அகமது - 51

இந்தியா 160/6. - விராட் கோலி - 82 (53) ஆட்டமிழக்காமல், ஹர்திக் பாண்டியா - 40

விராட் கோலியின் அபார ஆட்டத்தை கௌரவிக்கும் வகையில் ஐசிசி கீழ்க்கண்ட வரைபடத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com